சச்சினின் ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணம்... பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி


சச்சினின் ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணம்... பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி
x

image courtesy; PTI

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

குல்மார்க்:

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோருடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இந்த பயணத்தின்போது பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்ற அவர், உள்ளூர் ரசிகர்கள், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். மேலும் அவர் அங்கு முகாமில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில் சச்சின், ஜம்மு - காஷ்மீர் சுற்றுப்பயணம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "ஜம்மு காஷ்மீர் எனது நினைவில் ஒரு சுகானுபவமாக கலந்திருக்கும். அங்கு சுற்றிலும் பனி படர்ந்திருந்தது. இருப்பினும் காஷ்மீர் மக்களின் விருந்தோம்பல் எங்களுக்கு கதகதப்பை தந்தது. பிரதமர் நரேந்திர மோடி நம் தேசத்தில் காண வேண்டியவை நிறைய இருக்கின்றன எனச் சொல்லியிருந்தார். அது உண்மைதான். இந்த காஷ்மீர் பயணத்தில் அதை உணர்ந்தேன்.

"மேக் இன் இந்தியா, மேக் பார் தி வேர்ல்ட்" என்பதற்கு காஷ்மீர் வில்லோ மரத்தினால் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்டுகள் சிறந்த எடுத்துக்காட்டுகள். காஷ்மீர் வில்லோ மர பேட்கள் உலகம் முழுவதும் பயணிக்கின்றன. இப்போது உலக மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும், காஷ்மீரைக் காண வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். வியத்தகு இந்தியாவின் பல்வேறு விலைமதிப்பற்ற ஆபரணங்களில் ஜம்மு காஷ்மீரும் ஒன்று" எனப் பதிவிட்டுள்ளார்.

சச்சினின் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், "இதைப் பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கிறது. சச்சினின் ஜம்மு காஷ்மீர் பயணத்திலிருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று வியத்தகு இந்தியாவின் பல பகுதிகளைக் கண்டு ரசிக்க வேண்டும். இன்னொன்று மேக் இன் இந்தியாவின் முக்கியத்துவம். நாம் ஒன்றிணைந்து மேம்படுத்தப்பட்ட மற்றும் தன்னம்பிக்கையான பாரதத்தை உருவாக்குவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.


Next Story