ஒரே சொத்து 2 பேருக்கு விற்பனை; டெல்லியில் தம்பதி கைது


ஒரே சொத்து 2 பேருக்கு விற்பனை; டெல்லியில் தம்பதி கைது
x

டெல்லியில் சொத்து ஒன்றை 2 பேருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.



புதுடெல்லி,



புதுடெல்லியில் சுந்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ் தேசாய். இவரது மனைவி மிணால் சஞ்சீவ் தேசாய். இந்நிலையில், இவர்கள் மீது தீபக் பண்டாரி (வயது 52) என்பவர் டெல்லி போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, பொருளாதார குற்ற பிரிவு போலீசார் அவர்கள் இருவரையும் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். இதுபற்றி துணை காவல் ஆணையாளர் ரவிகுமார் சிங் கூறும்போது, புதுடெல்லியின் ஜசோலா பகுதியில், புகார் அளித்த பண்டாரி என்பவர் ரூ.2.04 கோடி மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த சொத்து, சட்டப்பூர்வ சிக்கல்கள், வழக்குகள் உள்ளிட்டவற்றில் இருந்து முற்றிலும் விடுபட்டது என விற்றவர் அளித்த தகவலின் பேரில், அதனை 2018-ம் ஆண்டில், 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.

எனினும், டெல்லி சாகேத் மாவட்ட கோர்ட்டு அதிகாரிகள், பிரமோத் குப்தா என்பவருடன் சேர்ந்து வந்து, 2020-ம் ஆண்டு நவம்பரில் அந்த சொத்தில் இருந்த உடைமைகள் எல்லாவற்றையும் நீக்கி விட்டு, சொத்துகளை முடக்கியது.

இதில், 2015-ம் ஆண்டு அக்டோபரிலேயே பிரேமாத் குப்தா என்பவருக்கு தேசாய் தம்பதி சொத்துகளை விற்றுள்ளனர். ஆனால், சொத்து விற்பனையை அவர்கள் முழுவதும் முடிக்கவில்லை. வாங்கிய தொகையையும் அவர்கள் திருப்பி தரவில்லை. இதனால், சொத்துகளுக்கு அவர்களே முழு உரிமையாளராக இருந்துள்ளனர்.

இதன்பின்னர், புகார் அளித்த பண்டாரிக்கு 2018-ம் ஆண்டு 2-வது முறையாக சொத்துகளை விற்றுள்ளனர். இந்த நிலையில், சொத்துகளை முதலில் வாங்கிய நபர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதற்கு தம்பதி எதிர்ப்பு தெரிவித்து பதில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த சூழலில், 2018-ம் ஆண்டு எந்த சிக்கலும் இல்லை என தெரிவித்து அந்த சொத்து தீபக் பண்டாரிக்கு விற்கப்பட்டு உள்ளது. ஆனால் கோர்ட்டில், சொத்துகளை முதலில் வாங்கிய நபருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்தே சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


Next Story