நகைகளை திருடி ஆடம்பரமாக வாழ்ந்த நகைக்கடை ஊழியர்... கள்ளக்காதலியை சந்திக்க வந்தபோது சிக்கினார்


நகைகளை திருடி ஆடம்பரமாக வாழ்ந்த நகைக்கடை ஊழியர்... கள்ளக்காதலியை சந்திக்க வந்தபோது சிக்கினார்
x

நகைக்கடை ஊழியர் ராகுல் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானேவில் தலோபலி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்த ராகுல் ஜெயந்திலால் மெஹ்தா என்ற நபர், கடந்த 8-ந்தேதியில் இருந்து பணிக்கு செல்லவில்லை. அதோடு, கடையில் இருந்து சில நகைகள் காணாமல் போனதால், கடையின் உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அதே சமயம், ராகுல் காணாமல் போனது தொடர்பாக அவரது மனைவியும் கடந்த 15-ந்தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, ராகுல் பணிபுரிந்து வந்த நகைக்கடையில் கடந்த 2023 நவம்பர் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.59 கிலோ எடை கொண்ட 70 நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ராகுலின் இருப்பிடத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், மிரா ரோடு பகுதியில் உள்ள தனது கள்ளக்காதலியை சந்திப்பதற்காக ராகுல் வர இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், ராகுலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் இருந்து திருடிய நகைகள் மூலம் கிடைத்த பணத்தை வைத்து ராகுல் இத்தனை நாட்களாக நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மும்பை, இந்தூர், குஜராத் என பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்த ராகுல், தனது கள்ளக்காதலியை சந்திக்க வந்தபோது போலீசிடம் சிக்கியுள்ளார்.


அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 408-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் இருந்து இதுவரை ரூ.62.10 லட்சம் மதிப்புள்ள 900 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story