சந்தேஷ்காளி விவகாரம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு உறுப்பினர் கைது


சந்தேஷ்காளி விவகாரம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு உறுப்பினர் கைது
x

70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததையடுத்து, ஷேக் ஷாஜகான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான், சொத்துகளை அபகரித்ததாகவும், மிரட்டி பணம் பறித்ததாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரேசன் ஊழல் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஷாஜகான் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். ஷேக் ஷாஜகான் தலைமறைவானார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதன்பிறகே ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அவரை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ஷேக் ஷாஜகான் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் மற்றொரு உறுப்பினரான அஜித் மைதியை மேற்கு வங்காள போலீசார் கைது செய்துள்ளனர். அஜித் மைதி தப்பி ஓடிய ஷேக் ஷாஜகானின் நெருங்கிய உதவியாளராக கருதப்படுபவர். நேற்று மாலை மைதியை கிராம மக்கள் துரத்தி தாக்க முற்பட்டுள்ளனர். அதன்பின்னர் மைதி கைது செய்யப்பட வேண்டும் என சந்தேஷ்காளி மக்கள் புகார் அளித்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததையடுத்து, ஷேக் ஷாஜகான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பி தலைமறைவாக இருக்கும் ஷேக் ஷாஜகானை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story