'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது - காங்கிரஸ் தகவல்


இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது - காங்கிரஸ் தகவல்
x

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே சமயம் 'இந்தியா' கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜி அறிவித்தார். அதேபோல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட உள்ளதாக பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். தற்போது பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரலாம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story