சிவசேனா கட்சி, சின்னம் ஷிண்டே தரப்பிடமே நீடிப்பு - இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சிவசேனா கட்சி, சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
புதுடெல்லி,
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டு காலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா விடாப்பிடியாக கூறியது.
இதற்கு உடன்பட பாஜக மறுத்ததால், இந்த கூட்டணி முறித்தது. சிவசேனா கட்சி கொள்கை வேறுபாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அரசை அமைத்து அரசியல் அரங்கை வியப்பில் ஆழ்த்தியது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து, பாஜக ஆதரவுடன் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி அமைத்தது.
இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கிடையே மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என்ற முடிவை தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
மேலும், சிவசேனா கட்சி பெயர், கட்சியின் 'வில்-அம்பு' சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தவறானது. எனவே, தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி சுப்ரீம் கோட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு முறையிட்டது.
இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு வழக்கை அவரசக வழக்காக இன்று விசாரித்தது. அப்போது, ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கும்படி உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.
ஆனால், மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு சிவசேனா கட்சி, சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கம் அளிக்கும்படி ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தரப்பிடமே தொடர்ந்து நீடிக்கிறது. தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளதால் இது உத்தவ் தாக்கரே தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.