தேசியவாத காங்கிரசில் இருந்து பிரபுல் பட்டேல் நீக்கம் - சரத்பவார் அதிரடி


தேசியவாத காங்கிரசில் இருந்து பிரபுல் பட்டேல் நீக்கம் - சரத்பவார் அதிரடி
x
தினத்தந்தி 3 July 2023 12:07 PM GMT (Updated: 3 July 2023 12:16 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித்பவார் 40 எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மராட்டிய பாஜக-ஏக்நாத்ஷிண்டே (சிவசேனா) அரசுக்கு ஆதரவு அளித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அஜித்பவார் மராட்டிய துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றார்.

அஜித்பவாருடன் தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பிரபுல் பட்டேல், கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுனில் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பதவியில் இருந்து பிரபுல் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்.பி. சுனில் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.


Next Story