காவிரி நீர் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என சித்தராமையா அறிவிப்பு


காவிரி நீர் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என சித்தராமையா அறிவிப்பு
x

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட கர்நாடகத்திடம் தண்ணீர் இல்லை என்றும், இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட கர்நாடகத்திடம் தண்ணீர் இல்லை என்றும், இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது.

காவிரி விவகாரம்

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, காவிரி நீரை திறந்துவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கிடையே ஏற்கனவே காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிட்டது.

ஆனால் அணைகளின் நீர் இருப்பு சரியத் தொடங்கியதை தொடர்ந்து, தண்ணீர் திறப்பை நிறுத்தியது. இதற்கிடையே காவிரி ஒழுங்காற்று குழு மேலும் 15 நாட்கள் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மத்திய மந்திரியிடம் வலியுறுத்தல்

இதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி படுகையில் உள்ள அணைகளில் தற்போதுள்ள நீர், குடிநீருக்கே போதாது, எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சாத்தியமில்லை என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மேலும் தங்களது நிலையை கர்நாடக நீர்ப்பாசனத்துறையை தன் வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சந்தித்து விளக்கி கூறினார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை பற்றி எடுத்துக்கூறினார். அத்துடன் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் கர்நாடகம் இல்லை என்றும் வலியுறுத்தினார்.

சித்தராமையா திட்டவட்டம்

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடகத்திடம் காவிரி நீர் இல்லை என்றும், இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட இருப்பதாகவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதாவது, இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மீண்டும் கடிதம்

வறட்சி பகுதிகளை முடிவு செய்ய இயற்கை பேரிடர் விதிமுறைகளில் திருத்தம் செய்யுமாறு கோரி மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு எந்த பதிலும் வரவில்லை. காவிரி, மேகதாது உள்பட நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி கடிதம் எழுதினேன். அதற்கும் மத்திய அரசு எந்த பதிலும் கூறவில்லை. மீண்டும் கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்.

வறட்சி பகுதிகளில் கூட்டு ஆய்வு நடத்தப்படும். அதன் பிறகு கருகிய விவசாய பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும். கால்நடைகளுக்கு தற்போதைக்கு தீவன பற்றாக்குறை இல்லை. வரும் நாட்களில் அவற்றுக்கு தொந்தரவு ஏற்படும் என்று கருதி ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 195 தாலுகாக்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

கட்டமைப்பு வசதிகள்

வறட்சி பாதித்த பகுதிகளில் மக்கள் இடம் பெயர்ந்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலபுரகியில் மந்திரிசபை கூட்டம் நடத்தப்படும். அதைவிட இங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தான் முக்கியம். கர்நாடகத்தின் உத்தரவாத திட்டங்கள் தெலுங்கானா, ராஜஸ்தானிலும் எதிரொலிக்கிறது. அங்கும் இதே போன்ற திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.

கல்யாண கர்நாடகத்தில் அரசு துறைகளில் உள்ள 26 ஆயிரம் காலியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் புதிதாக 8 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. அந்த பல்கலைக்கழகங்கள் தொடங்கியது மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் கிடையாது. ஏனெனில் ஏற்கனவே உள்ள பல்கலைக்கழகங்களில் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை.

தண்ணீர் இல்லை

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட கர்நாடகத்திடம் தண்ணீர் இல்லை. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். நமக்கு 106 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தேவைப்படுகிறது. இங்கு 53 டி.எம்.சி. நீர் தான் உள்ளது. எடியூரப்பா உள்பட அனைவரின் ஆட்சி காலத்திலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சராசரியாக ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.

இதுவரை அந்த மாநிலத்திற்கு 37.7 டி.எம்.சி. நீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 99 டி.எம்.சி. நீர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். எங்கே தண்ணீர் திறநதுள்ளோம்?. காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் அவ்வளவு நீர் இல்லாததால், நாஙகள் தண்ணீரை திறந்துவிடவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story