காவிரி நீர் திறக்காவிட்டால் அணைகளை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் சித்தராமையா பேச்சு
காவிரி நீர் திறக்காவிட்டால் அணைகளை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு
சராசரியாக மழை பெய்யும்
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு தலைவர் குருபூர் சாந்தகுமார், ஆம் ஆத்மி தலைவர் முக்கிய மந்திரி சந்துரு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுக்கள் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவற்றை ஆராய்ந்து தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்கின்றன.
-தமிழகத்திற்கு சராசரியாக மழை பெய்யும் காலத்தில் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) திறக்க வேண்டும்.
சிக்கல் எழுந்துள்ளது
நமக்கு ஆண்டுக்கு 284.85 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. மழை பற்றாக்குறையாக பெய்யும்போது நீரை பங்கிட்டுக்கொள்ள இடர்பாட்டு சூத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டு வகுக்கவில்லை. 2 குழுக்களை நியமிக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தது.
நடப்பு ஆண்டில் கடந்த ஆகஸ்டு மாதம் மழை பெய்யாததால் நமக்கு இந்த சிக்கல் எழுந்துள்ளது. இந்த மாதம் கூட போதிய அளவில் மழை பெய்யவில்லை. தமிழகத்திற்கு இதுவரை 43 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 123 டி.எம்.சி. நீர் நாம் திறந்திருக்க வேண்டும்.
ஆனால் நாம் நீர் விடவில்லை. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஒவ்வொரு முறையும் கர்நாடகம் தனது எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளது. நீர் இல்லை என்றே நாங்கள் கூறியுள்ளோம்.
காவிரிநீர் திறக்கக்கூடாது
சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தோம். நம்மிடம் தற்போது 50 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. இது நமது குடிநீரின் தேவைக்கு வேண்டும் என்று கூறியுள்ளோம்.
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், முன்னாள் அட்வகேட் ஜெனரல்களுடன் இன்று (நேற்று) கலந்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளேன். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க உள்ளோம்.
தமிழகத்திற்கு இனி காவிரி நீர் திறக்கக்கூடாது என்பது எங்களின் எண்ணம். நீர் திறக்காவிட்டால் அணைகளை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும்.
கோர்ட்டு அவமதிப்பும் ஆகிவிடும். இதனால் அரசை கலைக்க கூட செய்ய முடியும். மாநிலத்தின் நலன் கருதி நடைபெறும் போராட்டங்களை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.