10 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் குறித்து கவர்னரிடம் சபாநாயகர் நேரில் விளக்கம்


10 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் குறித்து கவர்னரிடம் சபாநாயகர் நேரில் விளக்கம்
x

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பற்றி நேற்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து சபாநாயகர் யு.டி.காதர் விளக்கம் அளித்தார். மேலும் கவர்னரிடம், அரசு மீது பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் பரபரப்பு புகார் அளித்தது.

பெஙகளூரு:

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து 7-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சட்டசபை கூடியது. கூட்டத்தின் தொடக்கத்தில் பா.ஜனதா உறுப்பினர் ஆர்.அசோக், எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதாகவும், இதற்காக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. இதையடுத்து பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தின.

அப்போது பா.ஜனதாவை சேர்ந்த ஆர்.அசோக் உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களிடம் இருந்த காகிதங்களை கிழித்து துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி மீது வீசினர்.

இதையடுத்து அந்த எம்.எல்.ஏ.க்கள் ஆர்.அசோக், அரக ஞானேந்திரா, பரத் ஷெட்டி, உமாநாத் கோட்டியான், அஸ்வத் நாராயண், சுனில்குமார் உள்பட 10 பேரை சபாநாயகர் யு.டி.காதர் சபையின் ஒப்புதலுடன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் வெளியேற மறுத்ததால், அவை காவலர்கள் 10 பேரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இதை கண்டித்து பா.ஜனதா தர்ணா போராட்டம் நடத்தியது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சபாநாயகர் யு.டி.காதர், துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி மற்றும் சட்டசபை செயலாளர் விசாலாட்சி உள்ளிட்டோர் நேற்று கர்நாடக ராஜ்பவனுக்கு சென்றனர்.

அங்கு அவர்கள், கவா்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினர். அப்போது சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து அவரிடம் விளக்கம் அளித்தனர். 10 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்தது ஏன் என்பது குறித்தும். அவர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் சபாநாயகர் எடுத்துக் கூறினார். இவற்றை கவர்னர் கவனமுடன் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் 10 எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்க விவகாரத்தில் கர்நாடக அரசு மற்றும் சபாநாயகரின் செயலை கண்டித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சபாநாயகர் மற்றும் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து அவா்கள் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து அவர்கள் அரசுக்கு எதிராக புகார் கடிதம் கொடுத்தனர்.

அதன் பிறகு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு ஜெயின் துறவி கொலை உள்பட பல்வேறு கொலைகள், கொள்ளைகள் நடந்துள்ளன. பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதிய மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. 3,500 கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விவாதிக்க சபையில் அனுமதி அளிக்கவில்லை. அரசியல் நோக்கத்தில் எதிர்க்கட்சி தலைவா்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கட்சிகளின் தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கர்நாடக அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்காக எங்கள் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.

அரசியல் ஆதாயத்திற்காக சபாநாயகர் பதவியை காங்கிரஸ் அரசு தவறாக பயன்படுத்துகிறது. சபாநாயகர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. சபாநாயகர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து தூரமாக இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் யு.டி.காதர் காங்கிரஸ் கட்சி வழங்கிய விருந்தில் பங்கேற்றார்.

அதனால் அவர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்த கடிதத்தை நாங்கள் சபாநாயகர் அலுவலகத்தில் வழங்கியுள்ளோம். அரசு தனது தவறுகளை மூடிமறைக்க பா.ஜனதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது. மக்கள் காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். மக்களின் பிரச்சினைகளை எழுப்ப எங்களுக்கும் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

கர்நாடகத்தில் பயங்கரவாத செயல்கள் நடக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களிடம் கிடைத்துள்ள தகவல்களை பார்க்கும்போது, அவர்களுக்கு சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறது. அதனால் இந்த வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். இந்த எல்லா விஷயங்களையும் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்துள்ளார். எங்கள் கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்துள்ளதால் நாங்கள் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளோம். இந்த விவகாரத்தை நாங்கள் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தி மக்களிடம் கொண்டு செல்வோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

அதுபோல் கர்நாடக அரசுக்கு எதிராக ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களும் எச்.டி.ரேவண்ணா தலைமையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து புகார் கடிதம் வழங்கினர். பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக சேர்ந்து கவர்னரை சந்தித்து முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story