இலங்கை சுதந்திர தின கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு


இலங்கை சுதந்திர தின கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
x

இலங்கையில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தமிழர்கள் கருப்புக்கொடியேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கொழும்பு,

அண்டை நாடான இலங்கை கடந்த ஆண்டு மத்தியில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் தத்தளித்தது. அன்னியச்செலாவணி இல்லாமல் போனதால் இறக்குமதி வெகுவாக பாதித்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் கடுமையாக உயர்ந்தன. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் வீதியில் இறங்கி போராடியதால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

இந்த நிலையில் அந்த நாடு நேற்று தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது.

மத்திய மந்திரி முரளீதரன் பங்கேற்பு

கொழும்பு நகரில் கோலாகலமாக நடந்த இந்த விழாவில், இலங்கைக்கு கடினமான தருணத்தில் உதவிக்கரம் நீட்டிய இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் கலந்துகொண்டார். 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, ராணுவ அணிவகுப்புடன் நடந்த விழாவில், அதிபர் ரணில் விக்ரம சிங்கே தலைமை ஏற்றார்.

தவறுகள், தோல்விகளை திருத்த வேண்டும்...

இந்த விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-

நாடு மிகக்கடுமையான, சவாலான தருணத்தில் இருந்தாலும், காலனி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதன் 75-வது ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறது. நாம் ஒரு தேசமாக நமது பலம் மற்றும் ஆதாயங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நமது தவறுகள் மற்றும் தோல்விகளை சரிசெய்வதற்கும் இது ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இலங்கை தனது தவறுகளையும், தோல்விகளையும் திருத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

இந்த 75-வது சுதந்திர தின விழாவை இலங்கையின் எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன.

இதுபற்றி எதிர்க்கட்சிகள் கருத்து கூறுகையில், "இந்த சுதந்திர தின கொண்டாட்டம், ஏற்கனவே நெருக்கடியால் புண்பட்டுப்போயுள்ள மக்களுக்கு மேலும் சுமையாக மாறி உள்ளது. உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள் தட்டுப்பாடு நாட்டை ஏழ்மையில் தள்ளி உள்ளது" என தெரிவித்தன.

தமிழர்கள் கருப்புக்கொடி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்கள், 1948-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலம் முதல் தங்களுக்கு அரசியல் சுதந்திரம் மறுக்கப்படுவதாக கூறியதுடன், சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்புக்கொடியேற்றினர்.

கொழும்பு நகரில் சுதந்திர தினக்கொண்டாட்டத்தின்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விடாமல் தடுக்கிற வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீதிகளில் துப்பாக்கி ஏந்திய படையினர் ரோந்து வந்தனர்.

இதற்கிடையே இலங்கையின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 208 அதிகாரிகளுக்கும், 7,790 படை வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், 622 தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிரதிநிதியாக மகிழ்ச்சி...

இலங்கையின் 75-வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அண்டை நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மைல்கல், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக ரீதியிலான உறவுகளை நிறுவி, 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் அமைந்துள்ளது. இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான பங்காளியாகவும், நம்பகமான நண்பராகவும் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story