உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத ஒருமுறை மட்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
18 ஆயிரம் மாணவர்கள்
உக்ரைனில் எம்.பி.பி.எஸ். மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்த சுமார் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள், போர் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினர்.அவர்கள் உக்ரைனுக்கு திரும்பிச்சென்று தங்களது மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
ஒருமுறை தேர்வு எழுத அனுமதி
இந்த வழக்கில், உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வினை எழுத இந்தியாவில் ஒருமுறை வாய்ப்பு தரப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:-
* எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 (எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வு) ஆகியவற்றை மேற்கொள்ள ஒரு முறை வாய்ப்பு தரப்படும்.
இதற்காக எந்த மருத்துவக் கல்லூரியிலும் அவர்கள் சேரத்தேவை இல்லை. எழுத்து தேர்வு, இந்திய எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தின்படி நடைபெறும். பயிற்சி, குறிப்பிட்ட சில அரசு மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
2 ஆண்டு பயிற்சி
* இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுகிற மாணவர்கள் 2 ஆண்டு கட்டாய சுழற்சி முறையிலான பயிற்சி பெற வேண்டும். முதல் ஆண்டு எந்த உதவித்தொகையும் வழங்கப்படாது. இரண்டாது ஆண்டு உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான முடிவினை தேசிய மருத்துவ கமிஷன் எடுத்துள்ளது.
* தற்போதைய பிரச்சினைக்கு மட்டுமே இந்த முடிவு பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலில் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இங்கே தங்கள் படிப்பைத்தொடர முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்ததும், இந்த மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதும் குறிப்பிடத்தக்கது.