பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவி தகுதி நீக்கம்: கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை


பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவி தகுதி நீக்கம்: கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை
x

பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவர் எச்.டி.ரேவண்ணாவின் மகனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் வெற்றிக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் ஹாசனை சேர்ந்த ஏ.மஞ்சு, தேவராஜ்கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். பிரஜ்வல் ரேவண்ணா, தனது சொத்துக்கள் குறித்த உண்மை தகவல்களை மறைத்து முறைகேடு செய்துள்ளதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

அவர்களின் மனுவை விசாரித்த நீதிபதி நடராஜன், கடந்த 1-ந் தேதி பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு கூறினார். மேலும் இந்த வழக்கில் முறைகேட்டுக்கு உதவியதாக அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா, சகோதரர் சூரஜ் ரேவண்ணா ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐகோர்ட்டில் பிரஜ்வல் ரேவண்ணா ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் இதுகுறித்து தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனால் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் கோரினார். அவரது இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா சுப்ரீம் கோர்ட்டில் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு வழங்கிய எம்.பி. பதவி தகுதி நீக்க தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது.


Next Story