பெங்களூருவில் மகனின் வீட்டு முகவரி தெரியாமல் 11 மணி நேரம் பரிதவித்த தமிழக மூதாட்டி; போலீசார் உதவியுடன் குடும்பத்துடன் இணைந்தார்
பெங்களூருவில் காய்கறி வாங்க சென்ற போது வழிமாறிய தமிழக மூதாட்டி மகனின் வீட்டின் முகவரி தெரியாமல் 11 மணி நேரம் பரிதவித்த சம்பவம் நடந்து உள்ளது. அவர் போலீசார் உதவியுடன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.
பெங்களூரு:
ஆரணி மூதாட்டி வசந்தி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் வசந்தி (வயது 60). இவரது மகன் ராஜேஷ் தனது மனைவி கவுதமியுடன் பெங்களூரு புலிகேசிநகர் அருகே கஸ்தூரிநகர் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகன், மருமகளை பார்ப்பதற்காக ஆரணியில் இருந்து வசந்தி பெங்களூருவுக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் காய்கறி வாங்குவதற்காக வசந்தி கடைக்கு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.
செல்போனையும் வீட்டில் வைத்து சென்றதால் அவரால் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் அவர் ஒரு பள்ளியின் முன்பு நீண்ட நேரமாக அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் ஒரு மூதாட்டி பள்ளியின் முன்பு நீண்ட நேரமாக அமர்ந்து இருப்பது பற்றி அப்பகுதி மக்கள் ஒய்சாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மகனின் செல்போன் எண்
இதையடுத்து அங்கு வந்த போலீசார், வசந்தியிடம் விசாரித்தனர். ஆனால் அவருக்கு தமிழ் மட்டுமே பேச தெரியும் என்பதால், போலீசாரால் அவரை பற்றிய விவரத்தை பெற முடியவில்லை. பின்னர் வசந்தியை ஒய்சாலா போலீசார் புலிகேசிநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு வைத்து தமிழ் தெரிந்த ஒருவர் உதவியுடன் வசந்தியிடம் போலீசார் விசாரித்தனர்.
ஆனால் அவருக்கு தனது மகனின் விலாசத்தை சொல்ல தெரியவில்லை. ஆனால் ஆரணியில் உள்ள தனது வீட்டின் முகவரியை கூறி இருந்தார். இதையடுத்து ஆரணி போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புலிகேசிநகர் போலீசார் பேசினர். இதையடுத்து வசந்தியின் வீட்டிற்கு சென்ற ஆரணி போலீசார் வசந்தியின் கணவர் ராஜேந்திரனிடம் இருந்து ராஜேசின் செல்போன் நம்பரை வாங்கி கொடுத்தனர்.
11 மணி நேர பரிதவிப்பு
இதன்பின்னர் புலிகேசிநகர் போலீசார் ராஜேசை தொடர்பு கொண்டு வசந்தி போலீஸ் நிலையத்தில் இருப்பது பற்றி தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு ராஜேசும், கவுதமியும் சென்றனர். தனது மகன், மருமகளை பார்த்ததும் வசந்தி ஆனந்த கண்ணீர் விட்டார். வசந்தியை அவரது மருமகள் கவுதமி கட்டி தழுவி ஆசுவாசப்படுத்தினார்.
பின்னர் வசந்தியை ராஜேசும், கவுதமியின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும் போலீசாருக்கும் நன்றி கூறினர். வீட்டில் இருந்து காய்கறி வாங்க காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து சென்று வழிமாறிய வசந்தியை மாலை 6 மணிக்கு தான் அவரது மகன், மருமகள் பார்த்தனர். வசந்தி 11 மணி நேரம் பரிதவிப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.