பயங்கரவாத சதி திட்டம்; காஷ்மீரில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை


பயங்கரவாத சதி திட்டம்; காஷ்மீரில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்டம் பற்றி 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஸ்ரீநகர்,

இந்தியாவில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி.), ஜெய்ஷ்-இ-முகமது (ஜே.இ.எம்.), ஹிஜ்புல் முஜாகிதீன் (எச்.எம்.), அல்-பாதர் மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இந்த அமைப்புகளில் இருந்து புதிதாக உருவான கிளைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளில் பலர் தரைநிலை பணியாளர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களது குடியிருப்புகள், இல்லங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த 2022.ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி தாமாக முன்வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். பயங்கரவாத சதி திட்டம் பற்றிய அந்த வழக்கு தொடர்பாக இதுவரை சமீபத்திய நாட்களில் மொத்தம் 51 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி விட்டனர்.

இந்த வழக்கின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெடிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் சிறிய ஆயுதங்கள் ஆகியவற்றின் உதவியால் கொடிய பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட இந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் சதி திட்டம் தீட்டியுள்ளன.

அவை உடல்ரீதியாகவும், இணையதளம் வழியாகவும் தாக்குதல்களை நடத்த சதி திட்டம் செய்து உள்ளன. இந்நிலையில், காஷ்மீரின் 3 இடங்களில் இதுபற்றிய சோதனை இன்று நடந்து உள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story