தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2,700 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை


தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2,700 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை
x

file pic

தமிழக அரசு சார்பில் கர்நாடகா நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்றி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடுவது இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடகா மதிக்காமல் மழையில்லை, தண்ணீர் இல்லை என தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதோடு காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

மேலும் அங்குள்ள கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பபை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பந்த் போராட்டங்களும் நடந்தன. அதோடு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையையும் முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் தான் கடந்த மாதம் 30ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் மாதம் 22ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீரை திறக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் வேறு வழியின்றி அந்த தண்ணீரை கர்நாடகா தமிழகத்துக்கு திறந்து விட்டது.

இந்நிலையில், டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 90வது கூட்டம் நடைப்பெற்றது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காணொலி மூலம் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் கர்நாடகா நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை என்பது ஓரளவு பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் திறப்பதில் அவர்களுக்கு சிக்கல் இருக்காது. அதேவேளையில் கர்நாடகா திறந்து விடும் தண்ணீரை மேட்டூர் அணையில் சேமித்து வைக்கவும் முடியும்.

ஏனென்றால் மேட்டூர் அணையில் 23 டிஎம்சி தண்ணீர் தான் இருப்பு உள்ளது. இதனால் கர்நாடகா திறக்கும் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியும் என கூறப்பட்டது. இதை கேட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு கர்நாடகாவை வினாடிக்கு 2,600 தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறியிருந்தோம். ஆனால் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முந்தைய நிலுவை தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. இதனால் நாளை முதல் டிசம்பர் இறுதி வரை தமிழகத்துக்கு தினமும் 2,700 கனஅடி நீரை கர்நாடகா திறக்க பரிந்துரை செய்யப்படுகிறது என கூறியது.

இதன்மூலம் நாளை முதல் கர்நாடகா தமிழகத்துக்கு 2,700 கனஅடி தண்ணீரை டிசம்பர் இறுதி வரை திறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story