தேஜஸ்வி யாதவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை..


தேஜஸ்வி யாதவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை..
x
தினத்தந்தி 30 Jan 2024 4:21 PM GMT (Updated: 30 Jan 2024 4:22 PM GMT)

நேற்று லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.

பாட்னா,

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, ரெயில்வேயில் பணி நியமனத்துக்கு நிலம் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், மனைவி ரப்ரி தேவி மற்றும் குடும்பத்தினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அவர் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். காலை 11 மணியளவில் ஆஜரான லாலு பிரசாத் யாதவிடம் இரவு சுமார் 9 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது. விசாரணையின்போது தேஜஸ்வி யாதவின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

நேற்று லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தேஜஸ்வி யாதவை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.


Next Story