'ஒரே நாடு, தேர்தல் கிடையாது' என்பதே மத்திய அரசின் நோக்கம் - காங்கிரஸ் விமர்சனம்


ஒரே நாடு, தேர்தல் கிடையாது என்பதே மத்திய அரசின் நோக்கம் - காங்கிரஸ் விமர்சனம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 14 March 2024 9:37 PM GMT (Updated: 14 March 2024 11:21 PM GMT)

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இதன்மூலம், வளர்ச்சி திட்டங்களை இடையூறு இன்றி அமல்படுத்த முடியும், தேர்தல் செலவுகளை குறைக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

எனவே, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அமைத்தது.

இந்தசூழலில் இதற்கான பணிகள் முடிந்தநிலையில், நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ராம்நாத் கோவிந்த் தாக்கல் செய்தார். இதன்படி நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துமாறு ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பிரதமர் மோடியின் நோக்கம் மிகவும் தெளிவானது. அவர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், அதாவது 400 தொகுதிகளில் வெற்றியை அளிக்குமாறு கேட்டு வருகிறார். அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை முற்றிலும் அழிக்க அவர்கள் விரும்புகிறார்கள். 'ஒரே நாடு, தேர்தல் கிடையாது' என்பதுதான் அவர்களது நோக்கம்" என்று அவர் கூறினார்.


Next Story