ஐபோனை திருடி வைத்து கொண்ட குரங்கு...!! படாதபாடு பட்ட நபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்


ஐபோனை திருடி வைத்து கொண்ட குரங்கு...!! படாதபாடு பட்ட நபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்
x

பாலியில் நடந்த சம்பவத்தில், பெண் ஒருவரின் செல்போனை திருப்பி தருவதற்கு அந்த குரங்கிடம், பெண் இரண்டு பழங்களை வழங்க முன் வந்திருக்கிறார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் பிருந்தாவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரெங்கநாத ஜி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரங்குகள் அதிகளவில் காணப்படுவது வழக்கம்.

கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களின் தனிப்பட்ட பொருட்களை அவர்களிடம் இருந்து பறித்து சென்று விடும். இதனால், பக்தர்கள் பயத்துடனும், பக்தியுடனும் கோவிலுக்கு செல்வார்கள்.

சில சமயங்களில் பறித்து செல்லும் பொருட்களை அந்த குரங்குகள் திருப்பி தருவதற்கு என்று 'டீல்' பேசப்படும். அதுபோன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்து வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வீடியோவில், கட்டிடத்தின் உயரத்தில் 2 குரங்குகள் அமர்ந்து இருக்கின்றன. அதில், குரங்கு ஒன்றின் கையில் விலையுயர்ந்த ஐபோன் ஒன்று காணப்படுகிறது. அதனை திரும்ப பெறுவதற்கான முயற்சியில் செல்போனின் உரிமையாளர் கீழே காத்திருக்கிறார்.

அந்த குரங்குகளை சுற்றி மக்கள் பலர் கீழே திரளாக கூடி நிற்கின்றனர். அந்த குரங்கிடம் இருந்து, ஐபோனை பெறுவதற்கான முயற்சியில் அவருக்கு துணையாக அவர்களும் கூடி நின்றனர். ஏதேதோ செய்து பார்த்தனர். தங்களிடம் இருந்த பொருட்களை அவற்றை நோக்கி வீசினர். அவற்றையெல்லாம், அந்த குரங்கு கண்டு கொள்ளவேயில்லை. நீண்டநேரம் ஆகியும் ஐபோனை திரும்ப பெற முடியவில்லை.

இறுதியில், புரூட்டி ஒன்றை எடுத்து வந்து, அந்த குரங்கை நோக்கி வீசினர். இதில், அதனை சரியாக ஒரு கையில் பிடித்த குரங்கு பின்னர் ஐபோனை விட்டு விட்டது. இதனை தரையில் கீழே இருந்து பார்த்த நபர் ஒருவர் அதிரடியாக பாய்ந்து ஐபோனை பிடித்து விட்டார்.

இதுபற்றி விகாஸ் என்பவர் வெளியிட்ட அந்த வீடியோவில், பிருந்தாவன குரங்குகள் ஒரு புரூட்டிக்கு ஈடாக ஐபோனை விற்று விட்டது என்ற தலைப்பிட்டு உள்ளார்.

இந்த வீடியோவை 6.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இதற்கு பலரும் ஆச்சரியங்களை வெளியிட்டு உள்ளனர். குரங்குகள் செல்போன்களை திருடுவதற்கு கற்று கொண்டு விட்டன. அவை பெரிய புத்திசாலியாகி விட்டன.

உணவுக்காக அவற்றை திருடுகின்றன என்றும் பலரும் இதுபோன்ற தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். உணவை எப்படி பெற வேண்டும் என்பதற்கான புதிய ஐடியாக்களை அவை வைத்திருக்கின்றன என்று ஒருவரும், குரங்குகள், அவை விரும்ப கூடிய பொருட்கள் கிடைப்பதற்காக, அதற்கு ஈடான பொருட்களை எப்படி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கும் என்று மற்றொருவரும் விமர்சனங்களில் தெரிவித்து உள்ளனர்.

பிருந்தாவன குரங்குகள் சிறந்த வர்த்தகர்களாக உள்ளன என்றும், சிலர் அவற்றை தொழில்முறை நிபுணர்கள் என்றும் விமர்சித்து உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு, பாலியில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது. அதில், பெண் ஒருவரின் செல்போனை திருப்பி தருவதற்கு அந்த பெண் இரண்டு பழங்களை வழங்க முன் வந்திருக்கிறார். அதன்பின்பே, செல்போன் அவருக்கு கிடைத்திருக்கிறது.


Next Story