சண்டையை விலக்கி விட்ட வாலிபர் கட்டையால் தாக்கி படுகொலை


சண்டையை விலக்கி விட்ட வாலிபர் கட்டையால் தாக்கி படுகொலை
x

பெங்களூருவில், சண்டையை விலக்கி விட்ட வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோபால்புரத்தை சேர்ந்தவர் சோனு பாஷா(வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் பரூக். இந்த நிலையில் பரூக்கிற்கும், சோனு பாஷாவின் சகோதரர் அக்ரமிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பரூக், அக்ரமை தாக்க முயன்றார்.

இருவரும் கடுமையாக சண்டையிட்டு கொண்டனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த சோனு பாஷா, சண்டையை விலக்கி விட முயன்றார். அப்போது பரூக், அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சோனு பாஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயம் அடைந்த சோனு பாஷா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த பின்னர் சோனு பாஷா உயிரிழந்துவிட்டதாக டாக்டர் கூறினார். இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே மாகடி ரோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சோனு பாஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சண்டையை விலக்கிவிட சென்றபோது, கட்டையால் தாக்கியதில் சோனு பாஷா உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பரூக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story