பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Dec 2023 10:28 PM IST (Updated: 19 Dec 2023 10:41 PM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி கேட்க உள்ளார்.

புதுடெல்லி,

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இதற்கிடையே, மத்தியக் குழுவும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு டெல்லி சென்றிருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 தென்மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் மழை வெள்ள நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார். கோவையில் இருந்தபோது, அதற்கான அனுமதி கிடைத்ததால், அங்கிருந்தே விமானம் மூலம் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், அங்கிருந்தபடி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக பேசி, மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில், இன்று இரவு பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

சந்திப்பின்போது, மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். மேலும், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி கோருவதுடன் மத்திய குழுவையும் பார்வையிட அனுப்பிவைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்த இருக்கிறார்.


Next Story