ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி சம்பாய் சோரன் வெற்றி


ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி சம்பாய் சோரன் வெற்றி
x
தினத்தந்தி 5 Feb 2024 2:33 AM GMT (Updated: 5 Feb 2024 9:29 AM GMT)

ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சம்பாய் சோரன் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபித்தார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 31ம் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டு இருந்தார். கவர்னரின் உத்தரவுப்படி, ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சம்பாய் சோரன் பெரும்பான்மையை காட்டினார். அதாவது ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக 47 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.

ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்தம் 81 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம் என்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் சம்பாய் சோரன் அரசுக்கு கிடைத்தது.


Next Story