இது முதல் முறையல்ல.. பட்டியலின மக்களிடம் டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்கவேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்


இது முதல் முறையல்ல.. பட்டியலின மக்களிடம் டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்கவேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Feb 2024 10:37 AM GMT (Updated: 6 Feb 2024 10:50 AM GMT)

டி.ஆர்.பாலுவின் பேச்சைத் தொடர்ந்து தி.மு.க. , பா.ஜ.க. எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை:

தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் மற்றும் மத்திய நிவாரணம் தொடர்பாக மக்களவையில் இன்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேசிக்கொண்டிருந்தபோது, மத்திய இணை மந்திரி எல்.முருகன் குறுக்கிட்டார். இதனால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, "என்ன சொல்ல வருகிறீர்கள்..? நான் பேசும்போது ஏன் குறுக்கிடுகிறீர்கள்? பேசாமல் உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு மந்திரியாக இருக்க தகுதியில்லை. எம்.பி.யாக இருக்கவும் தகுதி இல்லை. நாடாளுமன்றத்தில் ஒழுங்குடன் நடந்துகொள்ள வேண்டும்" என காட்டமாக பேசினார்.

இந்த விவகாரம் மக்களவையில் புயலை கிளப்பியது. மத்திய இணை மந்திரியை தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு அவமதித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக பட்டியலின உறுப்பினரை தகுதியில்லாதவர் என கூறி அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினர். இதனால், தி.மு.க. , பா.ஜ.க. எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளியேறினர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

டி.ஆர்.பாலு அரசியலுக்கே அவமானம். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினரைப் பற்றி அவர் இழிவான கருத்துக்களைக் கூறுவது இது முதல் முறையல்ல. மத்திய மந்திரி எல்.முருகன் மீதான அவரது கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

சமூக நீதியின் உண்மையான நாயகன் பிரதமர் மோடி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மந்திரி ஆக்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக மத்திய அரசாங்கத்தில் இருந்தபோது தி.மு.க.வால் இதை செய்யமுடியவில்லை.

மத்திய இணை மந்திரியின் மக்கள் சேவை, ஒரு மந்திரியாக நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு தி.மு.க. எம்.பி.க்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

டி.ஆர்.பாலு போன்றவர்களால் மட்டுமே இப்படி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரையும், மந்திரியையும் தகுதியற்றவர் என்று சொல்ல முடியும். தகுதியற்றவர் என்று சொன்னதற்காக பட்டியலின மக்களிடம் டி.ஆர்.பாலு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


Next Story