மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி வாகன அணிவகுப்பு மீது தாக்குதல்; திரிணாமுல் காங். மீது குற்றச்சாட்டு


மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி வாகன அணிவகுப்பு மீது தாக்குதல்; திரிணாமுல் காங். மீது குற்றச்சாட்டு
x

மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரியின் வாகன அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர் சுட்டுக்கொலை

மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த ஆண்டு வங்காளதேச எல்லையில் பி.எஸ்.எப். படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கால்நடைகளை கடத்துபவர் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த சம்பவம் அரங்கேறியது.ஆனால் அப்பாவி இளைஞரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது.

குறிப்பாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் வீட்டு முன்பு சமீபத்தில் திரிணாமுல் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கருப்புக்கொடி காட்டினர்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று அவரது வாகன அணிவகுப்பு மீது தாக்குதலும் நடந்தது. கூச்பெகர் மாவட்டத்தில் நடந்த பா.ஜனதா கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பெடாகுரியில் அவரது வாகன அணிவகுப்பை மறித்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினர்.

இதற்கு பா.ஜனதா தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மந்திரியின் வாகன அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. உடனே போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டுகளை வீசினர்

இந்த சம்பவம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிசித் பிரமாணிக், திரிணாமுல் காங்கிரசார் மீது குற்றம் சாட்டினார். தனது வாகனங்கள் மீது கற்களை வீசியது மட்டுமின்றி துப்பாக்கியால் சுட்டதாகவும், வெடிகுண்டுகளை வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அனைத்தையும் போலீசார் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டிய அவர், இந்த சம்பவத்தில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் காயமடைந்ததாகவும் கூறினார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது. மத்திய மந்திரியின் கார் மீதே இப்படி தாக்குதல் நடந்தால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை எப்படி இருக்கும்? என்பதை புரிந்து கொள்ளலாம் என பா.ஜனதா மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு

இந்த தாக்குதலை முன்வைத்து திரிணாமுல் ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

அதேநேரம் பா.ஜனதாவின் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. மாநிலத்தின் அமைதி சூழலை சீர்குலைக்க தொண்டர்களை பா.ஜனதா தூண்டி விடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் குணால் கோஷ் குற்றம் சாட்டினார்.


Next Story