உ.பி.: காவல் நிலையத்திற்குள் மோதி கொண்ட சுரங்க மாபியா கும்பல்


உ.பி.: காவல் நிலையத்திற்குள் மோதி கொண்ட சுரங்க மாபியா கும்பல்
x

உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்திற்குள் வைத்து சுரங்க மாபியா கும்பல் மோதி கொண்ட விவகாரத்தில் 10 பேருக்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது.

மெயின்புரி,

உத்தர பிரதேசத்தில் மெயின்புரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க இருந்தது. இதற்கான வி.ஐ.பி. பணியில் ஈடுபடுவது பற்றிய விவரங்களை கூறுவதற்காக காவல் அதிகாரி ஒருவர் சென்று கொண்டிருந்து உள்ளார்.

அப்போது வழியில், இரண்டு டிராக்டர் ஓட்டுநர்கள் மோதலில் ஈடுபட்டனர். வேறு சிலரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால், மோதலில் ஈடுபட்ட நபர்கள் ஆஞ்சா கேட் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபற்றி மெயின்புரியின் துணை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் கூறும்போது, அனுஜ் குமார் மற்றும் விபின் குமார் என்ற இரண்டு டிராக்டர் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களை சேர்ந்த சிலர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். ஆனால் அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளும் மோதி கொண்டனர். இதனை தொடர்ந்து, 4 பேர் மீது பிரிவு 191-ன் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. வேறு 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் சுரங்க மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் காவல் நிலையத்தில் மோதி கொண்ட காட்சிகள் வீடியோவாக வெளிவந்து வைரலானது.

அவர்களின் சண்டையை விலக்கி விட போலீசார் முயன்று உள்ளனர். எனினும், அதனையும் மீறி படத்தில் வரும் சண்டை காட்சிகள் போன்று மோதல் நடந்து உள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.


Next Story