பெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியலும் பரிசீலனை


பெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியலும் பரிசீலனை
x
தினத்தந்தி 17 Dec 2022 6:45 PM GMT (Updated: 17 Dec 2022 6:45 PM GMT)

பெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளிலும் வாக்காளர்கள் பட்டியல் பரிசீலனை செய்யப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளிலும் வாக்காளர்கள் பட்டியல் பரிசீலனை செய்யப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

25 தொகுதிகளின் வாக்காளர்கள்...

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடியதாகவும், வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நகரில் உள்ள சிவாஜிநகர், மகாதேவபுரா, சிக்பேட்டை ஆகிய 3 தொகுதிகளிலும் வாக்காளர்களின் பட்டியலை பரிசீலனை செய்வது, சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பெங்களூருவில் 28 தொகுதிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் 3 தொகுதிகளில் மட்டுமே வாக்காளர்கள் பட்டியல் பரிசீலனை நடக்கிறது. எனவே மீதி உள்ள 25 தொகுதிகளிலும் வாக்காளர்கள் பட்டியல் பரிசீலனை மற்றும் சரி பார்க்கும் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக 12 கே.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசியல் பிரமுகர்களுடன் ஆலோசனை

ஏற்கனவே 3 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்காளர்கள் பட்டியல் பரிசீலனை முடிந்து வருகிற 24-ந் தேதி அதிகாரிகள் அறிக்கை அளிக்க உள்ளனர். அதுபோல் மற்ற 25 தொகுதிகளின் அறிக்கையும் அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும். அந்த அறிக்கைகள் கிடைத்ததும் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சரியான முடிவு தெரியும்.

வாக்காளர்களின் பட்டியல் பரிசீலனை பணிகள் நடப்பது குறித்து அந்தந்த தொகுதிகளில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக வாரத்திற்கு ஒரு முறை அரசியல் பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.


Next Story