இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் பயங்கரவாதி பாகிஸ்தானில் கொலை


இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் பயங்கரவாதி பாகிஸ்தானில் கொலை
x

image credit: NDTV.com

இந்தியாவில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

இந்தியாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று மாலை ராவல்பிண்டியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் உயர்மட்ட தளபதி பஷீர் அகமது பீர் என்ற இம்தியாஸ் ஆலம் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை அனுப்பியதற்காகவும், ஊடுருவலுக்கு தளவாட உதவிகளை வழங்குவதற்காகவும் பஷீர் அகமது பீர் மத்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று, நேற்று மாலை பஷீர் அகமது பீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ராவல்பிண்டியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானில் ஹிஸ்புல் அமைப்பின் உயர்மட்ட தளபதியாக இருந்த பஷீர் அகமது பீர், ஊடுருவல்காரர்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் காஷ்மீருக்குள் அனுப்புவதிலும் முக்கிய பங்கு வகித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story