அமித்ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் என்ன செய்கின்றனர்? பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி கேள்வி
அமித்ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் என்ன செய்கின்றனர்? என பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அய்ஸ்வால்,
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களுடன் மிசோரம் மாநிலத்திலும் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. நவம்பர் 7-ந்தேதி மிசோரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி ராகுல் காந்தி 2 நாட்கள் பயணமாக நேற்று மிசோரம் சென்றார். முதல் நிகழ்ச்சியாக, தலைநகர் அய்ஸ்வாலில் அவர் பாதயாத்திரை மேற்கொண்டார். இதனிடையே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"மிசோரத்தில் நடைபயணம் சென்றபோது இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு கிடைத்ததை போன்ற ஒரு வரவேற்பு கிடைத்ததை பார்த்தேன். எனது எம்.பி பதவி பா.ஜ.க.வால் பறிக்கப்பட்டபோது, எனக்காக மிசோரம் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மிசோரம் சட்டசபை தேர்தலை ஒட்டி பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து இருக்கிறது. வயதானவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக வழங்குவது, எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.750 ஆக குறைப்பது போன்றவற்றை அறிவித்து இருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என பா.ஜ.க. குற்றம் சாட்டுகிறது. ஆனால், அமித்ஷா மகன் என்ன செய்கிறார். அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றார். இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.