மனைவி, குழந்தைகளை கொன்ற தொழிலாளி கைது


மனைவி, குழந்தைகளை கொன்ற தொழிலாளி கைது
x

மண்டியாவில் மனைவி, குழந்தைகளை கொலை செய்த கூலி தொழிலாளியை கலபுரகியில் போலீசார் கைது செய்தனர். கொலை செய்துவிட்டு வீட்டில் வந்து தூங்கியவரை பெற்றோரே போலீசில் பிடித்து கொடுத்தனர்.

மண்டியா:

மண்டியாவில் மனைவி, குழந்தைகளை கொலை செய்த கூலி தொழிலாளியை கலபுரகியில் போலீசார் கைது செய்தனர். கொலை செய்துவிட்டு வீட்டில் வந்து தூங்கியவரை பெற்றோரே போலீசில் பிடித்து கொடுத்தனர்.

குடும்ப தகராறு

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் ஜேவர்கியை அடுத்த கானகபுராவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி. இவர் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவை சேர்ந்தவர். இத்தம்பதிக்கு ஆதர்ஷ் (வயது 4) என்ற மகன், அமுல்யா (2) என்ற மகள் உண்டு. திருமணமானது முதல் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த லட்சுமி, ஸ்ரீரங்கப்பட்டணாவை அடுத்த மாலகாலா கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி சென்றதால் மிகவும் மன வேதனை அடைந்த ஸ்ரீகாந்த் பின்னர் மறுநாள் (வியாழக்கிழமை) மாலகாலா கிராமத்திற்கு சென்றார். அப்போது லட்சுமியின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட அவர், இங்கேயே வசிப்பதாகவும், ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுக்கும்படி கூறினார். இதை நம்பிய லட்சுமியின் பெற்றோர், ஸ்ரீகாந்த்தை அங்கேயே தங்கி கொள்ளும்படி கூறினர்.

மனைவி, குழந்தைகள் கொலை

இந்தநிலையில் அன்று இரவு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்த ஸ்ரீகாந்த், மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் இறந்ததும், குழந்தைகள் 2 பேரின் கழுத்தையும் அதே கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காலையில் வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது லட்சுமி மற்றும் குழந்தைகள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து ஸ்ரீரங்கப்பட்டணா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அந்த விசாரணையில் லட்சுமியின், கணவர் ஸ்ரீகாந்த் மனைவி, பிள்ளைகளை கொலை செய்திருப்பது உறுதியானது.

பெற்றோரே பிடித்து கொடுத்தனர்

இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்காமல் இருக்க ஜேவர்கியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று பதுங்கியிருந்தார்.

இந்தநிலையில் இந்த கொலை செய்தி அனைத்தும் டி.வி. சேனல்களில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது. இதனை பார்த்த ஸ்ரீகாந்தின் பெற்றோர், அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து ஜேவர்கி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீகாந்த்தை கைது செய்தனர்.

மனைவி நடத்தையில் சந்தேகம்

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

மனைவி லட்சுமி அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்ததால், யாருடனோ அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக ஸ்ரீகாந்த்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மனைவியுடன் ஸ்ரீகாந்த் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் 2 பிள்ளைகளும் தனக்கு பிறக்கவில்லை என்றும் கூறி வந்துள்ளார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

குடிபோதையில்...

சம்பவத்தன்று இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளை அவர் கொலை செய்ததும், இரவோடு இரவாக ஸ்ரீரங்கப்பட்டணாவில் இருந்து ஜேவர்கிக்கு சென்ற அவர் மதுகுடித்துவிட்டு குடிபோதையில் தனது வீட்டுக்கு சென்று கொலை பற்றி பெற்றோரிடம் எதுவும் கூறாமல் படுத்து தூங்கியுள்ளார். அதன் பிறகு டி.வி. சேனல்களில் செய்தி வந்ததை பார்த்த பெற்றோர், அவரை போலீசில் பிடித்து கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story