உக்ரைன் போரில் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவத்தயார்; ஜெர்மனி பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி உறுதி


உக்ரைன் போரில் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவத்தயார்; ஜெர்மனி பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி உறுதி
x

பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சும் டெல்லியில் சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். உக்ரைன் போரில் அமைதி செயல்முறைக்கு இந்தியா பங்களிப்பு செய்யத்தயார் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

ஜெர்மனி பிரதமர் இந்தியா வந்தார்

ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையில் ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சை பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து ஜெர்மனி பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

ஜெர்மனியில் 16 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஏஞ்சலா மெர்க்கலைத் தொடர்ந்து, பிரதமராகி உள்ள ஒலாப் ஸ்கோல்சின் முதல் இந்தியப் பயணம் இதுதான் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இரு தரப்பு பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் இடையே டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இவ்விரு தலைவர்களும் கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி இந்தோனேசியாவின் பாலித்தீவில் 'ஜி-20' உச்சி மாநாட்டின் இடையே சந்தித்துப் பேசியதும் நினைவு கூரத்தக்கது. பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சும் நடத்திய இரு தரப்பு பேச்சு வார்த்தையில், இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான விஷயங்கள், ராணுவ ஒத்துழைப்பு, பிராந்திய பிரச்சினைகள், உலகளாவிய விவகாரங்கள் இடம் பெற்றன.

உக்ரைன் போரில் அமைதித்தீர்வு

இரு தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சும் நிருபர்களைச் சந்தித்தனர். பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையேயான உறவு, ஆழமான புரிதல் அடிப்படையிலானது. இரு தரப்பு வர்த்தக பரிமாற்ற வரலாறு உள்ளது. ஐரோப்பாவில் ஜெர்மனி எங்களது மிகப்பெரிய வர்த்தகக்கூட்டாளி ஆகும்.

உக்ரைன் மோதல் தொடங்கியதில் இருந்து, மோதல்களை ராஜ தந்திர ரீதியிலும், பேச்சுவார்த்தை மூலமும் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்துள்ளது. உக்ரைன் மோதலில் எந்த அமைதி செயல்முறைக்கும் பங்களிப்பு செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று, உக்ரைன் மோதல் ஆகியவற்றின் தாக்கம், ஒட்டுமொத்த உலகத்திலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் அவற்றின் காரணமாக தள்ளாடுகின்றன.

பயங்கரவாதம்

பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், ஜெர்மனியும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை கொண்டுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதற்கு உறுதியான நடவடிக்கை தேவை என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தியா, ஜெர்மனி இடையேயான கூட்டில், இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு முக்கியமான தூணாக விளங்குகிறது. இரு தரப்பிலும் முக்கியமான அனைத்து விஷயங்கள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக பேசினோம்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகக்கூட்டாளியாகத் திகழ்வதுடன், இந்தியாவிலும் ஜெர்மனி முதலீட்டின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

'ஒத்துழைப்பு பெருகி வருகிறது'

இரு பெரிய ஜனநாயக பொருளாதார நாடுகள் இடையே ஒத்துழைப்பு பெருகி வருவது, இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் நன்மை பயப்பதோடு மட்டுமல்லாமல், இன்றைக்கு பொருளாதார அழுத்தத்துக்குள்ளாகி ஆளாகி உள்ள ஒட்டு மொத்த உலகத்துக்கும் சாதகமான செய்தியாக அமைகிறது.

மூன்றாம் நாடுகளின் வளர்ச்சிக்காக, முத்தரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பின் கீழ், இந்தியாவும், ஜெர்மனியும் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

உக்ரைன் போரால் பேரழிவு

ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷியப்போரின் விளைவுகளால் உலகமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. வன்முறையைப் பயன்படுத்தி, யாரும் எல்லைகளை மாற்றிக்கொண்டு விட முடியாது. உக்ரைன் போர் பெரும் இழப்புகளுக்கும், அழிவுக்கும் வழிநடத்தி இருக்கிறது. இது ஒரு பேரழிவு ஆகும்.

இந்தியாவுக்கு புகழாரம்

இந்தியா மகத்தான வளர்ச்சியை கண்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு மிகவும் நல்லது. ரஷியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகளால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதே உணவு மற்றும் எரிசக்தி வினியோகத்தை உறுதி செய்தல் வேண்டும். எங்களுக்கு திறமையும், ஆற்றலும் வாய்ந்த பணியாளர்கள் தேவை. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பமும், மென் பொருள் உருவாக்கமும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் திறன் வாய்ந்த பல நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் மிகப்பெரும் திறமைகள் உள்ளன. இரு தரப்பு ஒத்துழைப்பினால் நாங்கள் பலன் அடைய விரும்புகிறோம். திறமையான பணியாளர்களை பணியமர்த்தி, ஈர்க்க ஜெர்மனி விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story