விவசாயிகளை சிறையில் அடைப்பது தவறு: மத்திய அரசின் திட்டத்தை நிராகரித்த ஆம் ஆத்மி அரசு


தினத்தந்தி 13 Feb 2024 6:35 AM GMT (Updated: 13 Feb 2024 7:06 AM GMT)

கைது செய்யப்படும் விவசாயிகளை டெல்லி பவானாவில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் அடைத்து வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

புதுடெல்லி:

2020-ம் ஆண்டு டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதுபோன்று மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் இயற்ற வேண்டும், பென்சன், இன்சூரன்ஸ் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணியாக வந்துகொண்டிருக்கிறார்கள்.

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை டெல்லிக்குள் நுழைய முயன்றால், எல்லையில் தடுத்து நிறுத்தி கைது செய்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படும் விவசாயிகளை டெல்லி பவானாவில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் அடைத்து வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ஸ்டேடியத்தை தற்காலிக சிறையாக மாற்றும் திட்டத்தை டெல்லி மாநில அரசுக்கு அனுப்பி அனுமதி கோரியது. ஆனால், இந்த திட்டத்தை மாநில அரசு நிராகரித்துள்ளது.

மத்திய அரசின் திட்டத்திற்கு பதில் அளித்து மாநில உள்துறை மந்திரி கைலராஷ் கெலாட் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை. அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. எனவே, விவசாயிகளை கைது செய்வது சரியல்ல. விவசாயிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். நமக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளை இவ்வாறு கைது செய்வது, அவர்களை மேலும் மேலும் வேதனைப்படுத்துவது போன்றது. மத்திய அரசின் இந்த முடிவுடன் எங்களால் ஒத்துப்போக முடியாது.

இவ்வாறு அவர் தனது பதில் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

போராட்டங்களை கருத்தில் கொண்டு ஒரு மாதத்திற்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட பேரணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், எல்லை வழியாக வாகனங்கள் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story