யஷ்வந்தபுரம் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் எஸ்.டி.சோமசேகர்


யஷ்வந்தபுரம் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் எஸ்.டி.சோமசேகர்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியில் மீண்டும் எஸ்.டி.சோமசேகர் வெற்றி பெறுவாரா என்பது குறித்து இங்கு காண்போம்.

பெங்களூரு:

பெங்களூருவில் நகர் மற்றும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளில் ஒன்று யஷ்வந்தபுரம். இந்த தொகுதியில் இந்துக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக ஒக்கலிக சமுதாய மக்கள் பெரும் அளவில் இத்தொகுதியில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக சிறுபான்மையின மக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களும் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

இந்த தொகுதியில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 5 வார்டுகள் உள்ளன. அவை தொட்டபிதரஹள்ளு, ஹம்மிகேபுரா, ஹீரோஹள்ளி, கெங்கேரி, உல்லால் ஆகியவை ஆகும். தற்போது மாநகராட்சி தேர்தல் நடைபெறாததால் தொட்டபிதரஹள்ளி உள்ளிட்ட 5 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் யாரும் இல்லை. அதற்கு முன்பு 3 வார்டுகளில் காங்கிரஸ் கவுன்சிலர்களும், 2 வார்டுகளிலும் பா.ஜனதா கவுன்சிலர்களும் இருந்தனர். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் யாரும் இங்கு கவுன்சிலராக இல்லை.

யஷ்வந்தபுரம் தொகுதியில் மொத்தம் 5 லட்சத்து 42 ஆயிரத்து 672 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 77 ஆயிரத்து 218 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 65 ஆயிரத்து 374 பேர் ஆவர். 3-ம் பாலினத்தவர் 80 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி இந்த தொகுதியில் மொத்தம் 493 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிட்டப்பட்டு இருக்கிறது.

இத்தொகுதியின் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் எஸ்.டி.சோமசேகர். அவர் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் களம் கண்ட ஷோபாவை தோற்கடித்தார். பின்னர் ஷோபா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மந்திரி ஆனார். அதுபோல் எஸ்.டி.சோமசேகர் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் இருந்து விலகினார். தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் அவர் பா.ஜனதாவில் சேர்ந்து யஷ்வந்தபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அதையடுத்து அவருக்கு பா.ஜனதா மந்திரி பதவியும் வழங்கியது. தற்போது கூட்டுறவு துறை மந்திரியாக இருந்துவரும் எஸ்.டி.சோமசேகர் தனது தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

மேலும் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்து தசரா விழா, பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட யோகா தின விழா என பல முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி பா.ஜனதாவில் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.

அதன்பேரில் நடைபெற இருக்கும் தேர்தலிலும் பா.ஜனதா எஸ்.டி.சோமசேகரையே களம் நிறுத்தி இருக்கிறது. யஷ்வந்தபுரம் தொகுதியில் எஸ்.டி.சோமசேகர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்திருந்தாலும் இன்றளவும் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. குப்பை பிரச்சினை, சாக்கடை கழிவுநீர் பிரச்சினை, குண்டும்-குழியுமான சாலைகள் என ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகளுக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணபடவில்லை என்று கூறப்படுகிறது.

எஸ்.டி.சோமசேகரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பால்ராஜ கவுடா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். காங்கிரஸ் நிர்வாகியான இவர் அக்கட்சியின் பின்புலத்தால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது. அதுபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில் சசிதர் சி.ஆராத்யா போட்டியிடுகிறார். டெல்லியில் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போல் பெங்களூருவில் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்பில் ஆம் ஆத்மி களம் கண்டுள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் இந்த தொகுதியில் ஜவரே கவுடா மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து 3 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜவரே கவுடா இந்த முறையாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர்களும், அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு இருப்பதால் யஷ்வந்தபுரம் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


Next Story