பெங்களூருவில் பீகார் வாலிபர் கொலையில் மனைவி உள்பட 2 பேர் கைது


பெங்களூருவில் பீகார் வாலிபர் கொலையில் மனைவி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

பெங்களூருவில், பீகார் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனரீதியாக தொல்லை கொடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

சம்பிகேஹள்ளி:

பெங்களூரு கோகிலு லே-அவுட்டில் வசித்து வந்தவர் சகீல் அக்தர். பீகாரை சேர்ந்த இவர், பெங்களூருவில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நஜீரா காடுன். கடந்த 10-ந் தேதி தனது சகோதரர் சகீல் அக்தரை காணவில்லை என்று கூறி சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஓசி அக்தர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சகீல் அக்தரை தேடிவந்தனர். இதற்கிடையில், கடந்த 14-ந் தேதி கோகிலு லே-அவுட் அருகே முதாசீர் என்பவர் புதிதாக கட்டி வரும் கட்டிடத்தில் கழிவறை அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் சகீல் அக்தர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் சம்பிகேஹள்ளி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது வேறு இடத்தில் வைத்து அவரை கொலை செய்துவிட்டு உடலை குழிக்குள் வீசிச் சென்றது தெரியவந்தது.

அதாவது துணியால் மூட்டை கட்டி, அதற்குள் சகீல் அக்தரின் உடலை வைத்து மர்மநபர்கள் வீசி சென்றிருந்தனர். இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் மனைவி நஜீரா காடுனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கணவரை தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து கொலை செய்ததை நஜீரா காடுன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, நஜீரா காடூன் (வயது 25), அவரது சகோதரி காஷ்மீரி (28) ஆகிய 2 பேரையும் சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.சகீல் அக்தருக்கு, நஜீரா காடுன் 2-வது மனைவி ஆவார். திருமணத்திற்கு பின்பு சகீல் அக்தர் தனது மனைவிக்கு மனரீதியாக தினமும் தொல்லை கொடுப்பதுடன், அடித்து தாக்கியும் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நஜீரா காடுன், தனது சகோதரியுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை துணியில் கட்டி முதாசீர் கட்டி வரும் கட்டிட குழிக்குள் வீசியது தெரியவந்தது. கைதான சகோதரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story