இடுகாடுக்கு இடம் இல்லாத போது மும்பையில் வானுயர கட்டிடங்கள் இருந்து என்ன பயன்?- அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

இடுகாடுக்கு இடம் இல்லாத போது மும்பையில் வானுயர கட்டிடங்கள் இருந்து என்ன பயன்? என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
இடுகாடுக்கு இடம் இல்லாத போது மும்பையில் வானுயர கட்டிடங்கள் இருந்து என்ன பயன்? என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
2 வாரம் அவகாசம்
மும்பை பாந்திரா பகுதியை சேர்ந்த முகமது குரேசி என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், அவர் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு என பாந்திராவில் இடுகாடு ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டு இருந்தார். இந்தமனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி மாதவ் ஜாம்தார் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
அப்போது மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி பாந்திராவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு இறுதிசடங்கு செய்ய தலா 3 ஆயிரம் மீட்டர் இடம் ஒதுக்க முதல்-மந்திரி முடிவு செய்து இருப்பதாக கூறினார். ஆனால் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை என கூறிய அவர், அதற்காக 2 வாரம் அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
என்ன பயன்?
இதையடுத்து நீதிபதிகள் உயிரிழந்தவர்களுக்கு இறுதிசடங்கு செய்ய இடம் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பிரச்சினை என கூறினர். மேலும் அவர்கள், "இடுகாடுக்கு இடம் இல்லாத போது வானுயர கட்டிடங்கள் இருந்து என்ன பயன்?. உயரமான கட்டிடங்கள் கட்ட நீங்கள் தொடர்ந்து அனுமதி கொடுத்து வருகிறீர்கள். மக்களை மும்பைக்கு வாருங்கள் என கூறுகிறீர்கள். ஆனால் இதுபோன்ற அடிப்படை வசதிகள் கூடஇல்லை" என வேதனை தெரிவித்தனர்.
பின்னர் மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.






