உடல் எடை குறைப்பு விஷயத்தில் தவிர்க்க வேண்டியவை


உடல் எடை குறைப்பு விஷயத்தில் தவிர்க்க வேண்டியவை
x

இரவில் தூங்க செல்லும் நேரத்திலும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். சோர்வை உண்டாக்கும்.

உடல் எடையை குறைப்பதற்கு விரும்பும் பலரும் உடற்பயிற்சியையும், உணவுக்கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றுவார்கள். அவை உடனடி பலனை தர வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். உடல் எடை குறைப்பு விஷயத்தில் ஒரு சில பழக்கவழக்கங்களை முறையாக பின்பற்றாவிட்டால் எந்தவொரு பலனும் கிடைக்காது. மாலை 5 மணிக்கு மேல் ஒரு சில பழக்கவழக்கங்களை தவிர்க்க வேண்டியது அவசியமானது. அவை குறித்து பார்ப்போம்.

கலோரி அளவை குறைக்க வேண்டாம்:

அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு உடலுக்கு குறிப்பிட்ட அளவு கலோரிகள் தேவை. உடல் பருமனை குறைப்பதற்கு கலோரிகளின் அளவை கட்டுக்குள் பராமரிக்க வேண்டும். அதற்காக கலோரிகளின் அளவை ஒரேடியாக குறைத்துவிடக்கூடாது.

கலோரிகளின் அளவை குறைப்பதன் மூலம் தசைகள் பலவீனமடையும். உடலில் சேமித்து வைக்கப்படும் சத்துக்களும் வெளியேறிவிடும். நீர்ச்சத்தும் குறைந்து போகும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1,200 கலோரிகளை உட்கொள்ள வேண்டும். உணவில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புகள் போதுமான அளவு இடம் பெற்றிருப்பது முக்கியமானது.

கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்காதீர்கள்:

உடல் எடையை குறைக்க முயல்பவர்கள் இரவில் கார்போஹைட்ரேட் கலந்த உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள். இதனால் வயிறு முழுமையாக நிரம்பாது. சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். அத்தகைய சூழ்நிலையில் இரவில் சமச்சீரான உணவை சாப்பிடுமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அதனை பின்பற்றாத பட்சத்தில் உடலுக்கு தேவையானதை விட அதிக கலோரிகளை உட்கொண்டு விடுவார்கள். மூளையும், நரம்பு மண்டலமும் கார்போஹைட்ரேட் மூலம் திருப்தியை உணரும். மேலும் கார்போஹைட்ரேட் மூலம் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவும் குறைந்து வயிறு நிரம்பும். புரதமும் தசை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சாப்பிடும் உணவில் இவை இல்லாத பட்சத்தில் பசியை உணரக்கூடும். இரவில் அளவுக்கு அதிகமாக சாப்பிட தூண்டும்.

அதிகமாக சாப்பிடாதீர்கள்:

நிறைய பேர் பசியாக இருக்கும்போது சாப்பிடுவதில்லை. ஆனால் மன அழுத்தத்தில் இருக்கும்போது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது பலன் தரும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, பழங்கள், தயிர், உலர் பழங்கள், ஓட்ஸ், பெர்ரி போன்றவற்றை உட்கொள்வது நல்லது. உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இனிப்பு வகைகளையும் தவிர்த்துவிட வேண்டும். ஐஸ்கிரீமுக்கு பதிலாக தயிர், பழங்கள் உட்கொள்ளலாம். அவற்றில் இருக்கும் புரதங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் குறைவாக சாப்பிட்டாலோ அல்லது சாப்பிடவில்லை என்றாலோ இயற்கையாகவே உடல் எடையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் பலவீனமாகி நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நீரிழப்பும், மாரடைப்பும் ஏற்படும் அபாயமும் உண்டாகும்.

தூக்கம் அவசியம்:

உடல் எடையை குறைப்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதும் ஆபத்தானது. இரவில் தூங்க செல்லும் நேரத்திலும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். சோர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.

சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றால் பசி உணர்வு எட்டிப்பார்க்கும். உண்ணும் அளவு அதிகரிக்கும். குறைவான நேரம் தூங்கினால் தசைகளின் வலிமை குறையும். சாப்பிடாமல் இருந்தாலோ, குறைவாக சாப்பிட்டாலோ உடல் எடை குறையும் என்பது தவறான நம்பிக்கையாகும்.


Next Story