ராகுல்காந்தி யாத்திரை காங்கிரசுக்கு கை கொடுக்குமா?


ராகுல்காந்தி யாத்திரை காங்கிரசுக்கு கை கொடுக்குமா?
x

ஆளும் பாரதீய ஜனதாவின் வெறுப்பு அரசியல், மதவாதத்தை கண்டித்தும், இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தியும், வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராகவும் ராகுல் இந்த யாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் இந்திய ஒற்றுமை யாத்திரை அறிவித்தது.

ஆனால் அரசியல்வாதிகள் ஒரே கல்லில் இரண்டு மூன்று மாங்காய்களை அடித்துவிடுவார்கள். அவ்வளவு சாமர்த்தியம்!

சைக்கிள் டயரில் காற்று குறைந்துவிட்டால் வண்டியை ஓட்டுவது கடினம். இதனால் அவ்வப்போது காற்று அடித்துக்கொள்கிறோம். அதுபோல்தான் அரசியல் கட்சிகளும். தொடர் தோல்வியை சந்தித்தாலோ, தொண்டர்களிடையே உற்சாகம் குன்றினாலோ அவர்களை ஊக்கப்படுத்தவும், கட்சியை தூக்கி நிறுத்தவும் பேரணி, மாநாடு, பாதயாத்திரை என்று தலைவர்கள் கிளம்பிவிடுவார்கள்.

நடைபயணம் ஆரோக்கியத்துக்கு நல்லது மட்டுமின்றி, மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ள உதவுவதோடு, தலைவர்கள் தங்கள் செல்வாக்கையும் வளர்த்துக்கொள்ள முடியும். அந்த வகையில் யாத்திரை என்பது கட்சிகளுக்கு 'ஆக்சிஜன் சிலிண்டர்' மாதிரி. நெருக்கடியான நேரத்தில் கைகொடுக்கும். சந்தர்ப்பங்களுக்காக காத்து இருப்பவன் அப்பாவி; அதை உருவாக்கிக்கொள்பவன்தான் புத்திசாலி என்பார்கள்...

இப்படித்தான், 23 ஆண்டுகளுக்கு முன்பு அத்வானி ரதயாத்திரை நடத்தி, பாரதீய ஜனதாவுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தார். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய என்.டி.ராமராவ்தான், இந்தியாவில் ரதயாத்திரை கலாசாரத்தின் முன்னோடி. ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியை தொடங்கிய அவர் 'சைதன்ய ரதம்' என்ற பெயரில் திறந்த வேனில் மாநிலம் முழுவதும் 35 ஆயிரம் கி.மீ. தூரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து தேர்தலில் வென்று 1983-ல் ஆட்சியை பிடித்தார். அவரது வழியில் அங்கு அவரது மருமகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி, அவரது மகனும், தற்போதைய முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி என பலரும் யாத்திரை நடத்தி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கூட மறைந்த முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து இருக்கிறார்கள். தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலுக்கு முன் 'விடியலை நோக்கி' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்து பேசி, தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.

இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் அவ்வப்போது தலைவர்கள் யாத்திரை நடத்துகிறார்கள். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. யாருடன் கூட்டணி சேரலாம்? யாருடன் சேர்ந்தால் எவ்வளவு லாபம்? கூட்டணி ஜெயித்தால் யார் பிரதமர் ஆவார்? ஆட்சியில் பங்கு பெற முடியுமா? என்றெல்லாம் இப்போதே கட்சிகள் ரகசியமாக கணக்கு போட ஆரம்பித்துவிட்டன.

பாரதீய ஜனதா கூட்டணி வென்றால் மோடிதான் மீண்டும் பிரதமர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எதிர்க்கட்சி கூட்டணி வென்றால் யார் பிரதமர் என்பது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. அவ்வளவு ஏன்? இன்னும் கூட்டணியே உருவாகவில்லை. எலியும், தவளையும் போல் ஒருவர் கரைக்கு இழுத்தால், ஒருவர் தண்ணீருக்குள் இழுக்கிறார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் ராகுல் காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அதை, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எத்தனை கட்சிகள் மற்றும் கூட்டணியில் அல்லாத எத்தனை கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் சற்று பலவீனமாக இருப்பதால் மற்ற கட்சிகள் பிடி கொடுக்காமல் கபடி ஆடுகின்றன.

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தபின் காங்கிரசின் நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியை (44 இடங்கள்) சந்தித்த அந்த கட்சி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 52 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இதனால் அடுத்த தேர்தலுக்கு முன் கட்சிக்கு புத்துயிர் அளித்து தூக்கிநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இருந்தாலும், சோனியாகாந்தி குடும்பம்தான் காங்கிரசின் அடையாளமாக விளங்குகிறது. சோனியாவுக்கு உடல்நிலை ஒத்துழைக்காததாலும், பிரியங்காவுக்கு அரசியலுடன் குடும்ப சுமையும் இருப்பதாலும், பொறுப்பு முழுவதும் ராகுல்காந்தி தோளில்தான் சுமத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவது என்று அவரும் முழுமூச்சில் களத்தில் இறங்கிவிட்டார்.

அதன் தொடக்கம்தான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான அவரது "இந்திய ஒற்றுமை யாத்திரை". ஆளும் பாரதீய ஜனதாவின் வெறுப்பு அரசியல், மதவாதத்தை கண்டித்தும், இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தியும், வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராகவும் ராகுல் இந்த யாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் அறிவித்தது.

யாத்திரையின் முக்கிய நோக்கம் இதுதான் என்றாலும், காங்கிரசின் செல்வாக்கை மீட்டெடுக்கும் திட்டமும் இதில் அடக்கம்.இந்த ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஏராளமான தொண்டர்களுடன் அங்கிருந்து புறப்பட்ட ராகுல்காந்தி கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாசலபிரதேச மாநிலங்கள் வழியாக கடந்த மாதம் 19-ந் தேதி காஷ்மீர் போய் சேர்ந்தார். அங்கு கொட்டும் பனியில் 11 நாட்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டு 30-ந் தேதி ஸ்ரீநகரில் யாத்திரையை நிறைவு செய்தார்.

135 நாட்கள் நடைபெற்ற இந்த நீண்ட யாத்திரையில் ராகுல்காந்தி 4 ஆயிரம் கி.மீ. தூரம் நடந்து இருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கு செல்லும்போதும் அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்-சிறுமியர் அவருடன் கலந்து கொண்டு உற்சாகமாக நடந்து சென்றனர்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, சமூக ஆர்வலர் மேதா பட்கர், இந்தி நடிகர் அமோல் பலேகர், நடிகைகள் பூஜா பட், ரியா சென். ஊர்மிளா மடோன்கர், சுவரா பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் ஆங்காங்கே ராகுல் யாத்திரையில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ராகுலின் தாயாருமான சோனியா இரண்டு இடங்களில் நடைபயணத்தில் கலந்து கொண்டார். பொதுச்செயலாளர் பிரியங்கா டெல்லியிலும், சில இடங்களிலும் தனது சகோதரர் ராகுலுடன் நடந்து சென்றார்.

டெல்லியில் நடந்த யாத்திரையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பங்கேற்றார். மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டு ராகுலுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவருடன் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

வட மாநிலங்களில் நடைபயணத்தின் போது ராகுல் 'டி-சர்ட்' அணிந்து இருந்தார்.நடைபயணத்தின் போது தன்னுடன் வந்தவர்களுடன் ராகுல் மிகவும் கனிவாக நடந்து கொண்டார். அவ்வப்போது அவர்களுடன் உரையாடினார். பலர் அவருடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். எந்த சூழ்நிலையிலும் அவர் பதற்றம் அடையவில்லை.இந்த நடைபயணத்தின்போது ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூடாரம் உள்ளிட்ட தற்காலிக இடங்களில் ராகுல் தங்கினார். 12 பொதுக்கூட்டங்கள் மற்றும் 100 தெருமுனை கூட்டங்களில் பேசினார். ஏராளமான இடங்களில் கலந்துரையாடல்களும் நடத்தினார். 13 இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பங்கேற்றார்.

ஸ்ரீநகர் லால் சவுக்கில் ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, அங்குள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பிரியங்காவும் பங்கேற்றார்.அப்போது நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 'வெறுப்பு அரசியலுக்கு எதிராகவே ராகுல் இந்த யாத்திரையை நடத்தியதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நடத்தவில்லை' என்றும் தெரிவித்தார்.

அதன்பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், 'பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் வன்முறையை தூண்டி விடுவதாக' கடுமையாக சாடினார். 'வன்முறையால் ஏற்பட்ட இழப்பை, வலியை தான் அனுபவித்து இருப்பதாகவும், அந்த வலி அவர்களுக்கு தெரியாது' என்றும் கூறினார்.

காஷ்மீரில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வாகனத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும், ஆனால் யாரும் தன்மீது கையெறி குண்டுகளை வீசவில்லை என்றும், மாறாக கைகுலுக்கி வரவேற்றதாகவும் அப்போது உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார். அத்துடன், தன்னைப்போல் பாரதீய ஜனதா கட்சியினரால் காஷ்மீரில் நடந்து செல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

யாத்திரையின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு 23 கட்சிகளுக்கு மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்து இருந்தபோதிலும் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, புரட்சிகர சோசலிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பீகாரில் காங்கிரசின் கூட்டணி கட்சிகளாக இருக்கும் ராஷ்டிரீய ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளாதது எதிர்க்கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது.

பாரதீய ஜனதா கட்சியினரால் 'பப்பு' என்று ராகுல்காந்தி பரிகாசம் செய்யப்பட்டு வரும் நிலையில், தான் ஒரு பக்குவப்பட்ட-தொலைநோக்கு பார்வை கொண்ட-மக்களுக்கு நெருக்கமான அரசியல்வாதி என்பதை இந்த ஒற்றுமை யாத்திரையின் மூலம் அவர் நிரூபித்து இருக்கிறார்.

கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியபோது, 'தீனா' அஜித் போல் இருந்த ராகுல், ஸ்ரீநகரில் நடைபயணத்தை முடிக்கும் போது 'துணிவு' அஜித் போன்று மாறி இருந்தார். கையில் துப்பாக்கி ஒன்றுதான் இல்லாத குறை. யாத்திரையிலேயே முழு கவனமும் இருந்ததால் அவருக்கு முகச்சவரம் செய்யக்கூட நேரம் இல்லை போலும். அமைதி தவழும் அந்த அழகு முகத்தில் பாதியை தாடி ஆக்கிரமித்து இருந்தது. ம்...அதுவும் கம்பீரமாகத்தான் இருந்தது.

இந்த யாத்திரை முழுவதும் அவரிடம் ஓர் உற்சாகத்தையும், சாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறி இருப்பதையும் காண முடிந்தது. மொத்தத்தில் இந்த நெடிய யாத்திரை காங்கிரசார் மத்தியில் புதிய உத்வேகத்தையும், மக்களிடையே ராகுலை பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த நடைபயணம் ராகுலுக்கு தனிப்பட்ட முறையில் வெற்றிதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், காங்கிரசுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும்? என்று இப்போதே கணிக்க முடியாது.

'இந்திய ஒற்றுமை யாத்திரை'க்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தகட்டமாக, மேற்கே குஜராத்தில் மகாத்மாகாந்தி பிறந்த போர்பந்தரில் இருந்து கிழக்கே அருணாசலபிரதேசத்தில் உள்ள பரசுராம்குண்ட் வரை மற்றொரு நீண்ட யாத்திரை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இந்த யாத்திரை வருகிற மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் பெயரை சொல்லி முன்பு அத்வானி நடத்திய ரதயாத்திரை பாரதீய ஜனதாவின் எழுச்சிக்கும், அந்த கட்சி மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கும் வழிவகுத்தது. இப்போது ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் காங்கிரசுக்கு புத்துயிர் அளிக்குமா? அந்த கட்சியின் தலைமையில் வலுவான கூட்டணி அமையுமா? நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிவாகை சூட உதவியாக இருக்குமா? என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.

காந்தியின் 'தண்டி யாத்திரை'

யாத்திரை என்றதுமே நம் நினைவுக்கு வருவது, மாகாத்மா காந்தி நடத்திய தண்டி யாத்திரைதான். ஆங்கிலேய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், அந்த அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என்று கோரியும் 'உப்பு சத்தியாகிரகம்' என்ற பெயரில் காந்தி தண்டி யாத்திரை நடத்தினார். 1930-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்ட அவர் 24 நாட்கள் 385 கி.மீ. தூரம் நடந்து ஏப்ரல் 24-ந் தேதி கடற்கரை நகரமான தண்டியை சென்றடைந்தார். யாத்திரையின் தொடக்கத்தில் அவருடன் 78 பேர் மட்டுமே சென்றனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல பல்லாயிரக்கணக்கானோர் யாத்திரையில் பங்கேற்றதால் பெரும் எழுச்சி ஏற்பட்டது.

அகிம்சை வழியில் காந்தி மேற்கொண்ட இந்த யாத்திரை, இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.


Next Story