காஞ்சீபுரம் அருகே கட்டி முடித்து 10 ஆண்டுகளான பின்னரும் திறக்கப்படாமல் உள்ள நவீன தொகுப்பு வீடுகள்


காஞ்சீபுரம் அருகே கட்டி முடித்து 10 ஆண்டுகளான பின்னரும் திறக்கப்படாமல் உள்ள நவீன தொகுப்பு வீடுகள்
x

காஞ்சீபுரம் அருகே கட்டி முடித்து 10 ஆண்டுகளான பின்னரும் நவீன தொகுப்பு வீடுகள் திறக்கப்படாமல் உள்ளது. இவை விஷ பூச்சிகளின் வாழ்விடமாக மாறியுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தை அடுத்த திருப்புட்குழி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு கட்டி முடிக்கப்பட்ட 15 தொகுப்பு வீடுகள், 10 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும், மானிய முறையிலும் வீடு கட்டி வழங்குகிறது.

அந்த வகையில், இந்தியாவிலேயே முன்மாதிரியான, புயல், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன வசதிகளுடன் தொகுப்பு வீடுகள் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. அதற்காக தமிழக அரசு காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழியில் நிலம் ஒதுக்கியது.

அதற்கான தரமான மாதிரி தொகுப்பு வீடுகள் கட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் மலேசியா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெயக்குமார் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், திருப்புட்குழியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் வெளிநாட்டு கட்டுமான பொருட்களை கொண்டு மிகவும் தரமான 15 வீடுகளை கட்டிமுடித்தார்.

ஒவ்வொரு வீட்டிலும் சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு ஒரு படுக்கையறை, குளியலறை, சமையலறை வசதிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டது. தெருவுக்கு தார் சாலைகள் போடப்பட்டுள்ளது. எளிதில் தீப்பிடிக்காத வகையில் நேர்த்தியான முறையில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த தொகுப்பு வீடுகளை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ஆய்வு செய்து தரச்சான்று வழங்கியுள்ளது.

இப்படி தரமான முறையில் கட்டிமுடிக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் 10 ஆண்டுகள் ஆன பின்னரும் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த தொகுப்பு வீடுகள் தற்போது பராமரிப்பின்றி வீடுகளை சுற்றி, புல் பூண்டு, முளைத்து, செடி, மரம் வளர்ந்து விஷ பூச்சிகளின் வாழ்விடமாக உள்ளது.

தமிழக அரசு இந்த வீடுகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து, ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story