ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த மேலும் 100 பயணிகள் மீட்பு


ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த மேலும் 100 பயணிகள் மீட்பு
x

மீட்கப்பட்ட பயணிகள் ரெட்டியார்பட்டியில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

தூத்துக்குடி,

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ரெயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு 'செந்தூர் எக்ஸ்பிரஸ்' ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கனமழை காரணமாக தண்டவாளம் தெரியாததால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பயணிகள் ரெயிலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியால் நேற்று அதிகாலை வரை நடந்த மீட்பு பணியில், சுமார் 350 பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் 4 பஸ்கள் மற்றும் 2 வேன்கள் மூலம் வாஞ்சி மணியாச்சி அழைத்து வரப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக 100-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பஸ்கள் மூலம் ரெட்டியார்பட்டியில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கு அழைத்து வரப்படுகின்றனர். மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிறப்பு ரெயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.


1 More update

Next Story