திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் ரூ.105 கோடியில் 106 நவீன நெல் சேமிப்பு தளங்கள்


திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் ரூ.105 கோடியில் 106 நவீன நெல் சேமிப்பு தளங்கள்
x

திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் ரூ.105 கோடியில் 106 நவீன மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

106 modern paddy storage platforms at a cost of Rs.105 crore in 8 districts including Tiruvallur106 நவீன நெல் சேமிப்பு தளங்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 450 டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டு உள்ள 106 நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார்.

மேலும், ரூ.54 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறை கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பொது வினியோக திட்டத்திற்கான உணவு தானியங்களை சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவை உயர்த்தும் வகையிலும், உணவு பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக சேமிப்பு கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்கும் வகையிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் அரசின் சார்பில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

திறந்து வைக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்பு தளங்கள் விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியான நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றை இயற்கை பேரிடர் மற்றும் மழைப் பொழிவுகளில் இருந்து பாதுகாப்பாக சேமித்து வைத்திட 10 மாவட்டங்களின் 18 இடங்களில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் ரூ.238.07 கோடி மதிப்பீட்டில் நிறுவ ஆணையிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றில் பணி முடிக்கப்பட்ட, தஞ்சை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 450 டன் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டு உள்ள மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அரசு நடவடிக்கை

அடிக்கல் நாட்டப்பட்ட 12 புதிய வட்ட செயல்முறை கிடங்குகள் பொது வினியோக திட்டப் பொருட்களை சேமித்து வைத்திட புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள வட்டங்களில் வட்ட செயல்முறை கிடங்குகளை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

2022-23-ம் ஆண்டிற்கான கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கையில், உணவு தானியங்களைச் சேமிப்பதற்காக 12 வட்ட செயல்முறை கிடங்குகள் 28 ஆயிரம் டன் கொள்ளளவில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

அதன்படி மொத்தம் ரூ.54 கோடி மதிப்பீட்டில், மொத்தம் 28 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வே.ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் சு.பிரபாகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story