ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்திய 11 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
x

ஆந்திராவில் இருந்து ரெயிலில் 11 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் நேற்று ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் திடீரென பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய 2 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையில் 15 பாக்கெட்டுகளில் மொத்தம் 11 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த மிதுன டிக்கல் (வயது 35), பவானி டிக்கல் (32) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக வரும் பஸ்சில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் ஆந்திர - தமிழக எல்லைப் பகுதிகளான திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகனங்களை சோதனை செய்து வந்தனர்.

அப்போது அந்த வழியாக திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பஸ்சில் சந்தேகப்படும்படி இருந்த இளைஞரை பிடித்து உடைமைகளை சோதனை செய்த போது 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலத்தை சேர்ந்த யூசப் மகன் மிர்ஷாத் (வயது 30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து மிர்ஷாத்தை கைது செய்து மதுவிலக்கு அமலாக்க தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தான். அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்தை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்திய சின்னம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் சந்தோஷ் (47) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story