சிவகாசி அருகே பட்டாசு கடை விபத்தில் 12 பெண்கள் பலி


சிவகாசி அருகே பட்டாசு கடை விபத்தில் 12 பெண்கள் பலியானார்கள்

விருதுநகர்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களில் மயிலாடுதுறை,, அரியலூர் மற்றும் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லைப்பகுதிகளில் நடந்த பட்டாசு விபத்துகளில் பலர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக சிவகாசி பகுதிகளில் நடக்கும் பட்டாசு உற்பத்தியை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனாலும், நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 2 இடங்களில் பட்டாசு வெடி விபத்துகள் நடந்தன. இந்த சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர். அதில் எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு கடையில் நடந்த வெடிவிபத்தில் மட்டும் பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சிவகாசி கங்காகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சுந்தரமூர்த்தி (வயது 43).

இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எம்.புதுப்பட்டி அருகே ரெங்கப்பாளையம் கிராமத்தில் இயங்கி வருகிறது.

இந்த பட்டாசு ஆலையையொட்டி சுந்தரமூர்த்திக்கு சொந்தமான பட்டாசு கடையும், பட்டாசு சேமிப்பு கிடங்கும் இயங்கி வந்தன. அந்த கடைக்கு பின்புறமாக அமைத்து இருந்த 3 அறைகளில் கடைக்கு தேவையான பட்டாசு 'கிப்ட் பாக்ஸ்'களை தயார் செய்யும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வந்தனர்.

அதாவது, பலதரப்பட்ட வெடிகளை வைத்து அதை பாக்சாக தயார் செய்து விற்பனைக்கு வைப்பார்கள். இதில் விலையை பொறுத்து கிப்ட் பாக்ஸ்களில் வெடிகள் நிரப்பப்படும். இந்த பணியில் 3 அறைகளிலும் நேற்று மதியம் பெண்கள் மும்முரமாக இருந்தனர்.


அந்த நேரத்தில் வெளிப்புறமாக இருந்த கடைக்கு பட்டாசுகள் வாங்க வெளியூரில் இருந்து சிலர் வந்திருந்தனர். அவர்கள் சில வகை பட்டாசுகளை தேர்வு செய்தனர்.

அதில் சில பட்டாசுகளை எடுத்து கடையின் வெளியே வைத்து வெடித்து விபரீத செயலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. அப்போது, அதில் ஒரு பட்டாசு வெடித்து கடைக்குள் விழுந்ததாகவும்,. உடனே கடையில் இருந்த பட்டாசுகளில் தீப்பொறி பட்டு வெடித்துச் சிதற தொடங்கியதாகவும் தெரியவருகிறது.

கடையின் பின்புறம் அமர்ந்து பட்டாசு கிப்ட் பாக்ஸ் செய்துெகாண்டிருந்த பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரிவதற்குள், அங்கும் பட்டாசுகள் வெடித்துச்சிதறி புகை மண்டலமாக மாறியது. தொடர்ந்து பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் சிதறிய வண்ணமாக இருந்ததால் யாராலும் அருகில் நெருங்க முடியவில்லை. கடையின் உள்ளே இருந்தும் பெண்களால் வெளியே வர முடியாமல் அவர்கள் அலறினர். சற்று நேரத்தில் ஒருவர்பின் ஒருவராக உடல்கருகி பலியான கொடுமை நடந்துள்ளது.


இதற்கிடையே வெடிவிபத்து பற்றி அறிந்ததும் எம்.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சிவகாசி தீயணைப்பு படை வாகனங்கள் சற்று நேரத்தில் வந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டாலும், தொடர்ந்து பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச்சிதறின. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த பட்டாசு கடைக்கு உள்ளேயும், அதன் பின்புறமும் செல்ல முடிந்தது. அங்கு கண்ட காட்சி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. பலியானவர்கள் உடல்கள் ஆங்காங்கே கருகி கிடந்தன. அவற்றை மீட்டு உடனடியாக பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெண்கள் உள்பட மொத்தம் 13 பேரின் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அவற்றை அடையாளம் காண்பதற்காக போலீசார் தீவிர விசாரணைைய தொடங்கினர்.


மேலும் நேற்று அந்த பட்டாசு கடைக்கு பணிக்கு வந்தவர்கள், கிப்ட் பாக்ஸ் செய்யும் பணிக்கு வந்த பெண்கள் யார்-யார்? என்ற விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பட்டாசு விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், அந்த கடைக்கு வேலைக்கு வந்திருந்தவர்களின் உறவினர்களும் பதறியபடி வந்து அங்கு திரண்டு இருந்ததால் தீவிர விசாரணை நடந்தது.

அதன்பின்னர், பலியான 13 பேரின் பெயர்கள் விவரமும் தெரியவந்தது. அது வருமாறு:-

1. வடக்கு அழகாபுரி இந்திராநகரை சேர்ந்த ஸ்ரீசீனிராஜ் என்பவருடைய மனைவி மகாதேவி (வயது50)

2. வடக்கு அழகாபுரி நாகராஜ் மனைவி பஞ்சவர்ணம் (35)

3. இதே பகுதியை சேர்ந்த தாளமுத்து மனைவி தமிழ்ச்செல்வி (55)

4. மூவரை வென்றான் பகுதியை சேர்ந்த குருக்கலாஞ்சி மனைவி முத்துலட்சுமி (36).

5. எஸ்.அம்மாபட்டியைச் சேர்ந்த முனீசுவரி (32)

6. அழகாபுரி மகேந்திரன் மகள் தங்கமலை.

7. காந்தி நகர் முனியப்பன் மனைவி அனிதா (40).

8. லட்சுமியாபுரம் ஜெயமுருகன் மனைவி பாக்கியலட்சுமி (35).

9. இதே பகுதியை சேர்ந்த சுப்புக்கனி மனைவி குருவம்மாள் (55)

10. அம்மாபட்டி காளிராஜன் மனைவி லட்சுமி (28).

11. லட்சுமியாபுரத்தை சேர்ந்த முருகானந்தம் மனைவி இந்திரா (50).

12. மூவரை வென்றான் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மனைவி செல்லம்மாள் (40)

13. வடக்கு அழகாபுரி முத்துராஜ் மகன் பாலமுருகன் (30)


இந்த சம்பவத்தில் சங்கர் என்பவருடைய மனைவி சின்னத்தாய் (35), ஆறுமுகம் மனைவி பொன்னுத்தாய் (45) ஆகியோர் தீக்காயத்துடன் உயிர் தப்பினர்.

வெடி விபத்து நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரம்யா பாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார்கள் வடிவேல், தாசில்தார் சாந்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்ஜெயன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்த வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பட்டித்தெருவை சேர்ந்தவர் முத்துவிஜயன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கிச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 80-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று காலை பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆலையில் உள்ள ஒரு அறையில் நதிக்குடியை சேர்ந்த வேம்பு (வயது 60) என்பவர் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து தீப்பற்றி எரிந்தது. இதில் வேம்பு உடல் கருகி பரிதாபமாக இறந்தார். வெடிவிபத்தை தொடர்ந்து ஆலையில் பணியாற்றிக் கொண்டு இருந்த மற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியே ஓடி தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான வேம்புவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேம்புவின் மனைவி பொன்னுத்தாய் மற்றும் உறவினர்கள் வேம்புவின் கருகிய உடலை பார்த்து கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



Next Story