அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14-ந்தேதி கோவை வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
கோவை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள படகுத்துறையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் கோவை ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். அங்கு தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஈச்சனாரி பகுதியில் முதல்-அமைச்சர் பங்கேற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தினை மதுக்கரை தாசில்தார் பர்ஸானா, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.