சென்னையில் 155 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு - அமைச்சர் கே.என். நேரு தகவல்


சென்னையில் 155 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு - அமைச்சர் கே.என். நேரு தகவல்
x

சென்னையில் 155 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

மழை தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சென்னையில் 220 கிலோமீட்டர் நீளத்திற்கு 710 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதில், குறுகிய நேரத்தில் சில இடங்களில் ஒப்பந்ததாரர்கள், மரம் அகற்றுவது, மின்கம்பம் அகற்றுவது, சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் போன்ற காரணங்களால் பணிகள் தாமதமானது. இதன் காரணமாக சென்னையில் இதுவரை 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது. 75 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் இந்த ஆண்டு சுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை செய்துள்ளது. 75 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய பணிகளையும் நிறைவு செய்ய ஆயத்தமாகியுள்ளோம்.

சென்னையில் 400 மோட்டர்கள் வைத்து தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் வேலையும் நடைபெற்று வருகிறது' என்றார்.




Next Story