17-வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது - திருப்பூரில் பயங்கரம்


17-வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது - திருப்பூரில் பயங்கரம்
x

உடுமலை அருகே 17-வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 9 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் தென்பட்டது. இதையடுத்து அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை உறவினர்கள் விசாரித்தபோது 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் ஜெயகாளீஸ்வரன் (வயது 19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் உடுமலை பகுதியை சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உரிய விசாரணை செய்யுமாறு உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பு திரண்டனர். அப்போது உரிய விசாரணைக்கு பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் எனவே நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கைதான 9 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 17 வயதான சிறுமி பெற்றோரை இழந்ததால் தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள அவர் குடும்ப வறுமை காரணமாக ஏதாவது வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதனால் வேலை தேடி வந்துள்ளார். அப்போது அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்றபோது அங்கு உதவியாளராக பணியாற்றி வந்த 14 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த சிறுவன் சிறுமியிடம் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளான். இதை நம்பிய சிறுமி, சிறுவனுடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் சிறுவன் அழைத்து சென்ற இடத்திற்கு எல்லாம் சென்றுள்ளார். அப்போது சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் தனது நண்பர்கள் 8 பேருக்கும் சிறுமியை விருந்தாக்கியுள்ளான்.

தொடர்ந்து 9 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த நிலையில் சிறுமி கர்ப்பமாகவே இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story