சென்னையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
சென்னையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சென்னை தியாகராயநகர் அண்ணா தெருவை சேர்ந்த மாதவன் என்பவர், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிள் காணவில்லை என்றும், அதனை மீட்டுத்தரவேண்டும் என்றும் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருடிய தியாகராயநகரை சேர்ந்த சூர்யா (வயது 20) என்ற வாலிபர் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது கூட்டாளியான வியாசர்பாடியை சேர்ந்த கிஷோரை (19) போலீசார் கைது செய்தனர். கிஷோரிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் மீது ஒரு வழிப்பறி வழக்கும் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
இருவரும் சேர்ந்து சென்னை, விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.