'கிளுகிளு'ப்பாக செல்போனில் பேசி இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக வாலிபர்களை மயக்கி கொள்ளை - மிரட்டல் கும்பலில் 2 பேர் கைது


கிளுகிளுப்பாக செல்போனில் பேசி இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக வாலிபர்களை மயக்கி கொள்ளை - மிரட்டல் கும்பலில் 2 பேர் கைது
x

சென்னையில் இளம்பெண்கள் மசாஜ் செய்வதாக கிளுகிளுப்பாக பேசி வாலிபர்களை மயக்கி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னையில் தற்போது மசாஜ் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மசாஜ் கொள்ளையர்கள் என்ற பெயரில் நூதன கொள்ளையர்கள் வலம் வருகிறார்கள். இவர்களிடம் பெரிய அளவில் ஆண்கள்-பெண்கள் வேலை செய்கிறார்கள். இதில் வேலை செய்யும் பெண்கள், செல்போனில் குறிப்பாக இளைஞர்களிடம் இனிய குரலில் பேசுவார்கள். குறைந்த செலவில் மசாஜ் செய்கிறோம், அழகிய நன்கு படித்த இளம்பெண்கள் மசாஜ் செய்து விடுவார்கள், மசாஜ் மட்டும் அல்ல, தேவைப்பட்டால் அவர்கள் உங்களை உல்லாச உலகத்துக்கும் அழைத்து செல்வார்கள் என்று அழகாக பேசி அழைப்பார்கள். எங்கு வர வேண்டும், என்று நீங்கள் கேட்டவுடன் அடுத்த கணம், இன்னொரு பெண் பேசி ஒரு முகவரியை கொடுப்பார்.

அந்த முகவரிக்கு போனால், அங்கு இளம்பெண்களுக்கு பதில் வாட்டசாட்டமான ஆசாமிகள் இருப்பார்கள். அவர்கள் உங்களை மிரட்டி பணம், நகையை கொள்ளை அடித்துச்செல்வார்கள். சத்தம் போட்டால், கத்தியை கழுத்தில் வைப்பார்கள்.

கொண்டு சென்ற அனைத்தையும் ஓசை இல்லாமல் இழந்துவிட்டு வரவேண்டியது தான். இந்த மசாஜ் கொள்ளையர்களிடம் சிக்கி, ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் சீரழிந்த ஒரு சம்பவம் சென்னை நுங்கம்பாக்கத்தில் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட இளம் என்ஜினீயர் பெயர் கார்த்திக் (வயது 29). நுங்கம்பாக்கம் கோபால் நகரைச் சேர்ந்தவர். இவருக்கும் செல்போனில் இனிய குரலில் பேசி, மசாஜ் செய்கிறோம், வாருங்கள் என்று அழைப்பு வருகிறது. எங்கு வரவேண்டும் என்று கார்த்திக் கேட்டுள்ளார். உடனே, நுங்கம்பாக்கம், குமரப்பா தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

அங்கு சென்ற கார்த்திக்கை ஒரு அறையில் அடைத்து வைத்து, கத்தி முனையில் மிரட்டி உள்ளனர். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். அதோடு விடாமல் அவர் வைத்திருந்த கிரெடிட் கார்டை பிடுங்கி அதன் மூலம் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்தையும் பறித்துள்ளனர். அதன்பிறகு அவரை மிரட்டி அனுப்பி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கார்த்திக் நுங்கம்பாக்கம் போலீசுக்கு உடனே தகவல் கொடுத்தார். போலீஸ் படையினர் குமரப்பா தெருவில் உள்ள குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு சென்றால், அந்த வீட்டில் யாரும் இல்லை. கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த மசாஜ் கொள்ளையர்களை கைது செய்யும்படி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.

கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, துணை கமிஷனர் தேஷ்முக், உதவி கமிஷனர் ரவிஅபிராம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சேட்டு, சுதா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் உரிய வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேடுதல் வேட்டையில் மசாஜ் கொள்ளை கும்பலைச் சேர்ந்த கோவை கார்த்திகேயன் (23), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த விக்கி (24) ஆகிய இருவர் மட்டும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் மற்றும் தங்க நகைகள் மட்டும் மீட்கப்பட்டது. இந்த கும்பலை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

செல்போனில் இனிய குரலில் கிளுகிளுப்பாக பேசி மசாஜ் செய்ய வருமாறு யாராவது பெண்கள் அழைத்தால், உடனே அதில் மயங்கிவிடாமல், உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று போலீசார் பொதுவாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story