மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
x

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 20). இவர் தனது நண்பர் லோகேஷ் (20) என்பவருடன் கடந்த 1-ந் தேதி திருவாலங்காடில் நடந்த வடாரண்யேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை காண மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர், தேர் திருவிழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கனகம்மாசத்திரம்-தக்கோலம் நெடுஞ்சாலையில் அத்திப்பட்டு அருகே வந்தபோது, ஓடை கால்வாய் மீது தரைப்பாலப்பணி நடக்கும் இடத்தில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மோதிய விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் லோகேஷ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்த்திக் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (50) மற்றும் சின்னா (42) ஆகிய இருவரும் கனகம்மாசத்திரத்தில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த ரகுநாதபுரம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், இருவரும் நிலை தடுமாறி விழுந்ததில் இருவருக்கும் கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கிருஷ்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story