கேளம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டிய வக்கீல் உள்பட 2 பேர் கைது


கேளம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டிய வக்கீல் உள்பட 2 பேர் கைது
x

கேளம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டிய வக்கீல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் குப்பம்மாள் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 60). பெயிண்டு அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் பணிக்கு செல்லும்போது தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்கு கேளம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு முன்னால் பெட்ரோல் போட்டு விட்டு நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தவரை போகும்படி கூறினார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த நபர், நான் வக்கீல் என்று கூறி கத்தியை காட்டி மிரட்டியதுடன் கைகளால் சங்கரை தாக்கியுள்ளார். உடனே அருகில் இருந்த தையூர் பகுதி மக்கள் அவரை மடக்கி தர்ம அடி கொடுத்து விரட்டினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அவர் தனது நண்பருடன் அந்த பகுதிக்கு வந்து மிரட்டுவதற்காக சாலையில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். அதிர்ந்து போன ஊர் மக்கள் இது குறித்து கேளம்பாக்கம் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

சங்கர் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வக்கீல் சிவபிரசாத் (26) மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விக்னேஷ்வரன் (20) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கேளம்பாக்கம் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிவபிரசாத் மீது தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் வாகன திருட்டு வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story