தொழிலாளியை கொலை செய்து நாடகமாடிய தம்பி உள்பட 2 பேர் கைது


தொழிலாளியை கொலை செய்து நாடகமாடிய தம்பி உள்பட 2 பேர் கைது
x

நரிக்குடி அருகே தொழிலாளியை கொலை செய்து நாடகமாடிய தம்பி உள்பட 2 ேபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே தொழிலாளியை கொலை செய்து நாடகமாடிய தம்பி உள்பட 2 ேபரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி சாவு

நரிக்குடி அருகே சாலை இலுப்பைக்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 49). இவர் தோட்டக்கலை துறையில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய தம்பி சண்முகராஜ் (33). இவர்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் கருப்பசாமி வீட்டிற்குள் இறந்து கிடந்ததாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து கருப்பசாமியின் உடலை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். இதற்கிடையே கருப்பசாமி சாவில் மர்மம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கருப்பசாமி உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தம்பி சரண்

கருப்பசாமி எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சண்முகராஜ் சாலை இலுப்பைக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சண்முகராஜீக்கும், கருப்பசாமிக்கும் சொத்து பிரிப்பதில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கருப்பசாமி, சண்முகராஜ், அவரது நண்பர் திருப்பதி (33) ஆகிய 3 பேரும் சேர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் கருப்பசாமிக்கும், சண்முகராஜீக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறில் சண்முகராஜ், திருப்பதி ஆகிய 2 பேரும் சேர்ந்து கருப்பசாமியை தாக்கியதில் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது.

கொலை செய்தது அம்பலம்

பின்னர் கருப்பசாமியை தூக்கிக்கொண்டு அவரது வீட்டில் போட்டு விட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பசாமி இயற்கையாக இறந்தது போன்று அவர்கள் 2 பேரும் நாடகம் ஆடியது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் 2 பேர் மீதும் நரிக்குடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story