சட்டவிரோத விளம்பர பலகைகள்: மாநகராட்சி–போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு


சட்டவிரோத விளம்பர பலகைகள்:  மாநகராட்சி–போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 8 Jun 2017 1:08 AM IST (Updated: 8 Jun 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

இந்த சட்டத்திருத்தத்தின்படி போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், இதுவரை ஒருவர் மீது கூட வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றாத மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

ஒரு நடவடிக்கையும் இல்லை...

பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதைகளிலும், சாலைகளிலும் சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்பர பலகைகள் குறித்து வழக்கு தொடர்ந்தேன். இதையடுத்து, சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைப்பவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று தமிழ்நாடு நகராட்சி சட்டத்தில் கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 8–ந் தேதி தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்தது.

கருணாநிதி பிறந்தநாள்

இந்த நிலையில், கடந்த 3–ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, விமான நிலையத்தில் இருந்து கிண்டி வரையில் சாலைகள், நடைபாதைகளை ஆக்கிரமித்தும் சென்னையில் பல முக்கிய இடங்களிலும், சட்டவிரோதமாக விளம்பர பலகைகளை வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தேனாம்பேட்டை, அபிராமபுரம், திருவல்லிக்கேணி, கிண்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் செய்தேன். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்ஸ்பெக்டர்கள் மிரட்டல்

இதில், அபிராமபுரம், திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சட்டவிரோத விளம்பர பலகைகள் குறித்து ஏதாவது புகார் செய்தால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று மிரட்டினர்.

எனவே, சட்டவிரோத விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், இதுபோன்ற சட்டவிரோத விளம்பர பலகைகள் பொது இடங்களில் வைப்பதை தடுக்க முடியாது.

தமிழக அரசுக்கு நோட்டீசு

மேலும், விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத 4 போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு எதிராக தலைமை செயலாளர், சென்னை போலீஸ் கமி‌ஷனர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இந்த மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அரசுக்கு நோட்டீசு

இந்த மனுவை நீதிபதி எம்.துரைசாமி நேற்று விசாரித்தார். பின்னர், மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story